அன்பில் மகேஸ் ஊழல் வழக்கு: விசாரணையைத் தொடங்கியது அமலாக்கத்துறை
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி லஞ்ச வாங்கியதாகக் கூறப்படும் வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, பி.டி.அரசகுமார் என்பவரையும் அவருடைய உறவினர்கள் மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவரது வீட்டிலும் அலுவலகங்களிலும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 118 முக்கிய ஆவணங்கள், 18 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், 2 கணினிகளுடன் காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், செப்டம்பர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அவரிடம் நேரில் விசாரணையும் நடத்தப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடையவராக நம்பப்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இப்போது முறைப்படி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்காக மத்திய குற்றப்பிரிவினரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பெற்றுள்ளது.