📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 05, 2026 01:04 PM

அமெரிக்காவின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறும் சிங்கப்பூர் பெண்

அமெரிக்காவின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறும் சிங்கப்பூர் பெண்

வாஷிங்டன்: சட்டபூர்வ உடற்பிடிப்பு நிலையங்கள் என்ற பெயரில் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட 54 வயது சிங்கப்பூர் பெண் ஜிங் எம்டேஜ், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இப்பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது சிங்கப்பூரர் ஆவர். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புலனாய்வு விசாரணையைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜிங் எம்டேஜ், அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தம்பதியருக்குச் சொந்தமான ஒன்பது உடற்பிடிப்பு நிலையங்களை அதிகாரிகள் மூடினர். மேலும் ஆள் கடத்தல் மூலம் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 23 பெண்கள் மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று சிங்கப்பூர் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும், அவரது கணவரான 49 வயது ஜெரால்ட் எம்டேஜிற்கு 38 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் உடற்பிடிப்புத் தொழில் செய்து வந்த அந்தப் பெண், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவுக்குச் சென்று அடுத்த ஆண்டில் ஜெரால்ட்டைக் கரம்பிடித்தார்.

கொவிட்-19 பேரிடரால் ஏற்பட்ட நிதி இழப்புகளே தங்களை இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வைத்ததாக தண்டனைக் குறைப்பு மனுவில் கூறப்பட்டது. இருப்பினும், தம்பதியர் பல பெண்களைத் தவறான முறையில் பயன்படுத்தி பெரும் லாபம் ஈட்டியதாக அரசாங்கத் தரப்பினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சிங்கப்பூரர் ஏமஸ் யீ ஆவார். சிறுவர் ஆபாசப் பட வழக்கில் தண்டனை முடிந்து அவர் மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டார்.

சிங்கப்பூரரான லிம் சியோக் பெங் இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்றாவது சிங்கப்பூரர் ஆவார். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தம்முடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பற்றிய தகவல்களை அவர் அதிகாரிகளிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, மெக்சிகோ போதைப்பொருள் கும்பலுக்காகக் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.