அமைச்சர் நிர்மல்குமார் மீது சபாநாயகரிடம் தி.மு.க., சார்பில் உரிமை மீறல் புகார்
சென்னை: 'அமைச்சர் நிர்மல்குமார் மீது, சட்டசபை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின் உட்பட, சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசியதால், அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்டசபை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு, தி.மு.க., சார்பில், சபாநாயகர் பிரபாகரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. தி.மு.க., சட்டசபை கொறடா வேலு, எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், ராஜா, கார்த்திகேயன், காதர்பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர், நேரில் மனு அளித்தனர்.
பின் வேலு அளித்த பேட்டி: தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துஉள்ளது. மின்துறையின் அமைச்சர் நிர்மல்குமார், அதை சீரமைக்காமல் தான்தோன்றித் தனமாக பேசி வருகிறார்.
சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து, சபையில் எதுவும் பேசக் கூடாது என்பது விதி. மேலும், சபையில் இருப்போர் குறித்து புகார் கூற வேண்டுனெனில், முன்கூட்டியே சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கும் தகவல் அளித்து விட்டு தான் பேச வேண்டும். ஆனால், இந்த விதிகளை எல்லாம் மதிக்காமல், அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து பேசி வருகிறார்.
தொகுதி பிரச்னைகள், சட்டம் -- ஒழுங்கு உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அமைச்சர்கள் வேறு ஒன்றை பேசி திசை திருப்பும் அரசியல் செய்கின்றனர்.
'மிசா' கைது குறித்து முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக, ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம். முதல்வர் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு, மனு அளித்துள்ளோம். இப்போது, அமைச்சர் நிர்மல்குமார் மீது சட்டசபை உரிமை மீறல் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.