ஆவினுக்கு ‘பால் ஊற்றும்’ தமிழக அரசு?
ஆவினுக்கு ‘பால் ஊற்றும்’ தமிழக அரசு?
பொங்கும் விவசாயிகள்... புழுங்கும் முகவர்கள்!
ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்துவரும் சூழலில், “உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ற வகையில், பால் கொள்முதல் விலையையும், பால் முகவர்களின் கமிஷன் தொகையையும் உயர்த்தாவிட்டால், ஆவின் நிர்வாகமே விரைவில் அழிந்து போகும்” எனக் கொதிப்புடன் சாபமிடுகிறார்கள் பால் உற்பத்தியாளர்களும் முகவர்களும்!
இது குறித்து ‘தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க’த்தின் பொதுச்செயலாளர்எம்.ஜி.ராஜேந்திரனிடம் கேட்டபோது, “உணவுப் பொருள்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையான பாலுக்கு மட்டும் உரிய உற்பத்தி விலையைக் கொடுக்க அரசு மறுத்துவருகிறது.
ஒரு லிட்டர் பசும்பால் உற்பத்திக்கான தீவனம் உள்ளிட்ட செலவு 60 ரூபாயையும் தாண்டுகிறது. ஆனால், இப்போதுதான் ஒரு லிட்டர் பால் கொள்முதலுக்கான விலையை, தமிழக அரசு 44 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த 6 ரூபாயில், ஒரு ரூபாயை மட்டும் அரசு நேரடியாக வழங்குவதாகவும், மீதமுள்ள5 ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கவிருப்பதாகவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
ஊக்கத்தொகை என்பது அரசு நிதி ஒதுக்கிய பிறகே, ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்குக் கிடைக்கும் என்பதால், உயர்த்தப்பட்ட இந்த 5 ரூபாயும் பால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
அடுத்ததாக 4.3% கொழுப்புச்சத்து, 8.2% இதர சத்துகளைக்கொண்ட பாலுக்கு மட்டும்தான் இந்த 44 ரூபாய் கிடைக்கும். ஆனால், மொத்த பால் உற்பத்தியில் வெறுமனே 10% மட்டுமே இந்தத் தரத்தில் கிடைக்கும். மீதமுள்ள 90% இந்தத் தரத்துக்குக் கொஞ்சம் குறைவானதாகத்தான் இருக்கும். இது போன்ற தரம் குறைந்த பாலுக்கு, ஒன்றிரண்டு ரூபாயைக் குறைத்துத்தான் கொடுப்பார்கள். இது மட்டுமல்லாமல், கூட்டுறவு சங்க செலவுகளுக்காக, ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ஒரு ரூபாய் 25 காசு பிடித்தமும் செய்துகொள்வார்கள்.
இப்படித் தொடர்ச்சியாக நஷ்டத்தையே சந்தித்துவரும் பால் உற்பத்தி விவசாயிகளில் பெரும்பாலானோர் மாடு வளர்ப்புத் தொழிலையே விட்டுவிட்டனர். இதனால் 32 லட்சம் லிட்டர் என்ற அளவில் இருந்த ஆவின் கொள்முதல் இன்று 27 லட்சம் லிட்டராக சுருங்கிப் போய்விட்டது. இந்த நிலையில், தற்போது இருக்கின்ற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் அரசு, ஒரு லிட்டருக்கான கொள்முதல் விலையை ரூ.60-ஆக உயர்த்தித் தர வேண்டும்” என்றார் கோரிக்கையாக.
தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களின் செயல்பாடு பற்றிப் பேசியவர், “தனியார் பால் நிறுவனங்கள் 45 ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்கின்றனர். பாலின் தரம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும்கூட விலையில் எந்தவித மாறுதலும் செய்வதில்லை. பாலுக்கான பணத்தையும் ஆவின் நிர்வாகம்போல் இழுத்தடிக்காமல் உடனுக்குடன் பட்டுவாடா செய்து விடுகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்குப் பால் வழங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார்.
இதற்கிடையே ‘தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க’த்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி நம்மிடம் பேசும்போது, “பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்திக் கொடுக்குமாறு, கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் போராடிவருகிறோம். அது குறித்து காது கொடுக்காத தமிழக அரசு, தற்போதுதான் ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தியிருக்கிறது.
அப்போதும்கூட உயர்த்தப்பட்ட கொள்முதல் விற்பனைக்கு ஏற்ற வகையில், விற்பனை விலையை உயர்த்தவில்லை. இதனால், ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மேலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்தும் அதிகரிக்கவில்லை.
எனவே, கர்நாடகா மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதோடு, வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடரைக்கொண்டும் தட்டுப்பாட்டைச் சமாளித்துவருகின்றனர். இது மட்டுமல்லாமல், ஆவின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக, பால் விற்பனையைக் குறைக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாகத்திலிருந்தே வாய்மொழி உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, த.வெ.க அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. கூடவே, பால் முகவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து, விழிபிதுங்கி நிற்கின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்குப் பயந்துகொண்டு ஆவின் பால் விலையை உயர்த்தாமல் இருக்கிறது தமிழக அரசு. இதனால் பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் நஷ்டமடைந்து தொழிலே அழிந்துபோவதோடு, த.வெ.க அரசுக்கும் கெட்ட பெயர்தான் கிடைக்கும்” என்றார் அழுத்தமாக.
இதையடுத்து ‘பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்வதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?’ என்ற கேள்விக்கு விடை கேட்டு பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைத் தொடர்புகொண்டோம். அவர், ‘‘பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் கொள்முதல் விலையை உயர்த்தியிருக்கிறார். அதன் பின்பும், கோரிக்கை தொடருமானால், அது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்’’ என்றார்.
டாஸ்மாக்கில் வெளி மாநில சரக்கைக் கொண்டு வந்து விற்க முயலும் அரசு, பச்சிளம் குழந்தை அருந்தும் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய வேண்டாமா?