ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவிலேயே உள்ளது: கொதித்து பேசிய அமைச்சர் மரிய வில்சன்
ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவிலேயே உள்ளது: கொதித்து பேசிய அமைச்சர் மரிய வில்சன்
"முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு இங்கு மேற்கொண்ட பிரச்சாரம், மதுராந்தகம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என மரிய வில்சன் தெரிவித்தார்.
Published : September 28, 2026 at 4:20 PM IST
சென்னை: ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது என நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட 42-வது வார்டு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி அமைச்சருமான மரிய வில்சன் திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மரிய வில்சன் பேசினார்.
அவர் கூறுகையில், "விஜய் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே முந்தைய ஆட்சிகளில் செய்யப்படாத பல முக்கிய விஷயங்களை செய்துள்ளார். பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தியது; விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளை முதலமைச்சர் செயதுள்ளார்.
இன்னும் விவசாயிகள் முன்வைக்கும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார். பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் தினந்தோறும் கவனமாக கண்காணித்து வருகிறார். இதுகுறித்து துறை ரீதியாக அமைச்சர்களுடன் அவர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்" என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இடைத்தேர்தலுக்காகவும், மதுராந்தகம் தொகுதியின் மண்டலப் பொறுப்பாளர் என்ற வகையிலும் அப்பகுதியில் சில நாட்களாக முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இங்குள்ள சுமார் 25 வார்டுகளிலும் வசித்து வரும் மக்களை, தினந்தோறும் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். தவெகவுக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு இங்கு மேற்கொண்ட பிரச்சாரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என மரிய வில்சன் தெரிவித்தார்.
முன்னதாக, புதிய தலைமைச் செயலகம் அமையப் போகும் இடம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்தது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மரிய வில்சன், "எதிர்கட்சி தலைவர் ஆபாசமாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆபாசமாக பேசுவது என்பது திமுகவின் வரலாற்று மரபணுவிலேயே கலந்துள்ளது. அவர்களின் அரசியல் வரலாற்றிலேயே அது இருக்கிறது" எனக் கூறினார்.
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், மதுராந்தகம் தொகுதியில் செல்லும் இடமெல்லாம் தவெகவினருக்கும், தவெக வேட்பாளருக்கும் வரவேற்பு இருப்பதாகவும், சில இடங்களில் இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரத்தை எதிர்கட்சியினர் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.