📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 24, 2026 12:04 PM

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம்

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம்

நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன.

துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிகள் ஸ்கீட் பிரிவு இறுதிப் போட்டியில் ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான், பரினாஸ் தலிவால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 331 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஸ்கீட் அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். சீனா 357 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், 336 புள்ளிகளுடன் கஜகஸ்தான் வெள்ளிப் பதக்கமும் வென்றன.

மகளிருக்கான ஸ்கீட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் ரைசா தில்லான் 23 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இறுதிப் போட்டியில் 8 பேர் பங்கேற்ற நிலையில் பரினாஸ் தலிவால் கடைசி இடம் பிடித்தார்.

ஆடவருக்கான ஸ்கீட் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, மைராஜ் அகமது கான், பவ்தேக் சிங் கில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 346 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஸ்கீட் தனிநபர் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவர், பதக்கத்தை வெல்லவில்லை.