2027 உலககோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்பார்களா? பிசிசிஐ விளக்கம்
2027 உலககோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்பார்களா? பிசிசிஐ விளக்கம்
மும்பை: 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவது குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணித் தேர்வுக்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், வீரர்களின் உடல்தகுதியும் ஆட்டத்திறனுமே முதன்மை அளவுகோலாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய மிதுன் மன்ஹாஸ், "பிசிசிஐ தரப்பில் இதுகுறித்து நாங்கள் நேரடியாகக் கருத்து தெரிவிக்க முடியாது."
"ஏனெனில் இது முற்றிலும் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களின் அதிகார வரம்பிற்குட்பட்டது. ஆனால், எனது பார்வையில் வீரர்களின் தேர்வுக்கு வயது ஒரு காரணியாக இருக்கக் கூடாது. உடல்தகுதியும் களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் ஆட்டத்திறனுமே தேர்வுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
"ஒரு வீரர் முழு உடல்தகுதியுடன் இருந்து, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு நாட்டுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறார் என்றால், அதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
"அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பது கில்லுக்கு நிச்சயமாக உதவும். அதேபோல ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் பந்துவீச்சுப் பிரிவை வழிநடத்த முடியும். இதன் மூலம் கேப்டனின் பணிச்சுமையைப் பிரித்துக் கொள்வது எளிதாகும்" என்று மன்ஹாஸ் விளக்கமளித்தார்.
இதன் மூலம் விராட் கோலி,ரோகித் சர்மா ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இருந்து ரன்களை குவித்தால் நிச்சயம் இருவரும் 2027 உலககோப்பை தொடரில் பங்கேற்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது, இந்த சூழலில் கோலி, ரோகித்துக்கு கிடைத்த இந்த ஆதரவு முகமது ஷமிக்கும் கிடைக்குமா என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சரியாக உலககோப்பை தொடருக்கு ஒரு ஆண்டு உள்ளது.