"2 ஆசிய கோப்பைகளும் மும்பைக்கு வரும்".. பாகிஸ்தான் அமைச்சருக்கு பிசிசிஐ செயலாளர் விடுத்த எச்சரிக்கை
"2 ஆசிய கோப்பைகளும் மும்பைக்கு வரும்".. பாகிஸ்தான் அமைச்சருக்கு பிசிசிஐ செயலாளர் விடுத்த எச்சரிக்கை
மும்பை: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பைகளைப் பெற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மறுத்து இருந்தன. அதே சமயம் வேறு அதிகாரிகளை வைத்து அந்த கோப்பைகளை இந்தியாவிடம் கொடுக்க முன் வராத நக்வி அதை தன்வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணிகள் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய கோப்பைகள் இரண்டும் விரைவில் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ல் ஆண்கள் அணியும், அண்மையில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணியும் மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்துப் புறக்கணித்தன. கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, நமது நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிசிசிஐ இந்த தீர்க்கமான கொள்கை முடிவை எடுத்தது.
இது குறித்துப் பேசிய தேவஜித் சைகியா, "நாங்கள் எடுத்த முடிவு தனிப்பட்ட வீரர்களுக்கோ அல்லது கிரிக்கெட் போட்டிக்கோ எதிரானது அல்ல. நமது நாட்டின் சுயமரியாதை தொடர்பானது. ஒரு சிலர் தங்களது அதிகார மமதையால் பிரச்சனையைத் தீர்க்காமல் பிடிவாதம் பிடித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது" என்றார்.
மேலும், "கோப்பைகள் எப்போது வரும் என்ற கால அட்டவணையை இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி; நேற்று மகளிர் அணி வென்ற கோப்பை மட்டுமின்றி, கடந்த ஒரு ஆண்டாக வராமல் இருக்கும் ஆண்கள் அணியின் கோப்பை என இரண்டு ஆசிய கோப்பைகளும் மிக விரைவில் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலக அலமாரியை அலங்கரிக்கும். இரு தொடர்களிலும் நாங்களே உண்மையான சாம்பியன்" என்று கூறினார்.
துபாயில் இருக்கும் இந்திய அணிக்கு சொந்தமான இரண்டு ஆசிய கோப்பைகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழியாக முறைப்படி இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.