📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil June 01, 2026 05:30 AM

அறியப்படாத நாயகர்கள் மாணவர் விருது: 194 இளம் சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்

அறியப்படாத நாயகர்கள் மாணவர் விருது: 194 இளம் சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்

ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள கடைவீட்டில் கடந்த ஆண்டு (2025) ஏற்பட்ட தீச்சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இரண்டாம் தளத்தில் சிக்கியிருந்த பிள்ளைகளை வெளிநாட்டு ஊழியர்கள் பலர் காப்பாற்றினர்.

அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தம்மால் முடிந்த அளவு சிறு வகையில் நன்றி தெரிவிக்க விரும்பினார் 15 வயது சிவதரணி பார்த்திபன்.

தாம் ஏற்கெனவே தொடங்கியிருந்த ‘புரொஜெக்ட் கைண்ட்’ அமைப்பு மூலம் சக மாணவர்களுடன் இணைந்து தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கினார் சிவதரணி.

பாராட்டை எதிர்பார்க்காமல் சமுதாயத்திற்கு அர்ப்பணிப்புடன் நற்பணி ஆற்றிய சிவதரணி போன்ற மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறது ‘சிங்கப்பூர் அறியப்படாத நாயகர்கள்’ மாணவர் விருது.

‘சிங்கப்பூர் சிவிலியன்ஸ் சங்கம்’ ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை 81 பள்ளிகளைச் சேர்ந்த 194 மாணவர்கள் இவ்வாண்டு கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் மற்றொருவர் எட்ஜ்ஃபீல்டு தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் எவ்யவ் அருண்குமார்.

சிறப்புத் தேவையுடைய நண்பருக்கு ஓர் ஊன்றுக்கோளாக இருந்துவரும் எவ்யவ், 2025ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும் அந்த நண்பரின் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் அவரோடு விளையாடவும் நேரத்தைச் செலவிடுகிறார்.

தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியில் சட்டாம்பிள்ளையாக இருக்கும் சங்கர் அக்சரா, அதையும் தாண்டி மூத்தோருக்கான நடவடிக்கைகளை நடத்திவருகிறார்.

இரண்டாம் ஆண்டு மாணவரான சங்கர், நீடித்த நிலைத்தன்மை குறித்த இணையத்தளத்தையும் உருவாக்கிச் சுற்றுச்சூழல்மீதுள்ள ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்கிறார்.

காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இராஜவேல் சர்வேஷூக்கும் அந்த விருது அளிக்கப்பட்டது.

உயர்நிலை மூன்றில் படிக்கும் சர்வேஷ், சக மாணவர்களின் நலனில் அக்கறை காட்டியதற்காக விருதைப் பெற்றார்.

“சட்டாம்பிள்ளையாகச் சில நிர்வாகப் பணிகளைப் பார்த்துக்கொள்வதுடன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் செயல்பாடுகளையும் மேற்கொள்கிறேன்,” என்றார் சர்வேஷ்.

கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவி கீர்த்தனா, சக மாணவர்களுக்குப் பாடங்களில் உதவுவதோடு, சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கும் கைகொடுக்கிறார்.

“என் அப்பாவுடன் தொண்டூழியம் செய்து மற்றவர்களுக்கு உதவி செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று பகிர்ந்துகொண்டார் கீர்த்தனா.