📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 08, 2026 08:30 AM

பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் விடுத்த எச்சரிக்கை

கடந்த ஆண்டுகளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

Published : June 7, 2026 at 4:16 PM IST

கோவை: ஜூன் மாத இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்றும், இதை மீறி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (ஜூன் 7) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் லட்சியம். இந்த இலக்கை அடையச் சுதந்திரமாகச் செயல்படுமாறு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் சிலர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆகையால், போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதை அனுமதிக்கமாட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேச மட்டுமே செய்பவர்கள் நாங்கள் கிடையாது.

டாஸ்மாக் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளோம். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணை ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக்கில் மட்டும் அல்ல வேறு எந்த துறையிலும் ஊழல் இருக்காது.

ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு தனி நபர்களின் கணக்கிற்குச் செல்லும் அளவிற்கு மாபெரும் ஊழல் டாஸ்மாக்கில் கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளது. மதுபான விற்பனையில் மட்டுமல்லாமல், கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இத்துறையில் கடந்த காலத்தில் நடந்த தவறுகள் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் வெளிக்கொண்டு வரப்படும். ஊழல் செய்த நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டுகளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. டாஸ்மாக் கடைகளில் ஜூன் மாத இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலைத் தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். மீறி பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்கினால், அந்த ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்தார்.