யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம்! அரசின் கருவூலத்துக்குச் செல்லாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்
யுபிஐ பரிவர்த்தனை மீதான கட்டண விதிப்பு குறித்து செய்தியாளருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான கட்டணம் குறித்து எதிர்க்கட்சிகள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்தக் கட்டணங்கள் வரியோ செஸ்ஸோ இல்லை என்பதை வணிகர்களும் மக்களும் நன்கு அறிந்துள்ளனர்.
யுபிஐ பரிவர்த்தனைகள் மீது அரசு எந்த கூடுதல் கட்டணத்தையும் விதிக்கவில்லை. இதிலிருந்து பெறப்படும் கட்டணம், அரசின் கருவூலத்துக்கு செல்லாது. ரூ. 2,000-க்கு அதிகமான பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்படும் 0.4 சதவிகித கட்டணமானது வங்கிகள், க்யூஆர் சேவை வழங்குநர்கள், பிஓஎஸ் மெஷின் வழங்குநர்கள், வணிகர்களின் வங்கிகளுக்கு பகிரப்படும். இது அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பரஸ்பர முடிவு.
இந்தக் கட்டணமானது, வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது. உதாரணமாக, ரூ. 5,000-க்கு நீங்கள் ஒரு பொருள் வாங்கினால், கட்டண ரசீதில் கட்டப்பட வேண்டிய தொகையும் ஜிஎஸ்டி மட்டுமே இருக்கும்; எம்டிஆர் இருக்காது. நுகர்வோரிடமிருந்து எம்டிஆர் கட்டணத்தை வணிகர்கள் வசூலிக்க மாட்டார்கள். இந்த நடவடிக்கையில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தெரிவித்தார்.