📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 26, 2026 10:04 AM

யுஓபி பிளாசா பள்ளிவாசல் அருகே தீ வைத்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

யுஓபி பிளாசா பள்ளிவாசல் அருகே தீ வைத்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

பள்ளிவாசல் ஒன்றின் நுழைவாயிலில் தீ மூட்டியதாகக் கூறப்படும் 50 வயதுச் சீன ஆடவர்மீது சனிக்கிழமை (செப்டம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் எண் 80, ராஃபிள்ஸ் பிளேசில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் சனிக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இடம் யுஓபி பிளாசாவின் அடித்தளத்தில் உள்ள ‘மஸ்ஜித் மௌலானா முகமது அலி’ என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பள்ளிவாசலின் நுழைவாயிலில் ஓர் எண்ணெய்ப் பெட்டியை வைத்து, அதன்மேல் வைக்கப்பட்ட உள்ளாடை ஒன்றில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களில் ஒருவர் அந்தத் தீயை அணைத்தார். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீவிர விசாரணைகள், கண்காணிப்பு படக்கருவிகளின் உதவியுடன் அந்தச் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான தீ விபத்தை ஏற்படுத்தியது அல்லது அதற்குத் துணைபோனது தொடர்பில் ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

ஆடவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.