📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 05:00 PM

Yezhu Kadal Yezhu Malai Review

Yezhu Kadal Yezhu Malai Review

இயக்குநர் - ராம்

நடிகர்கள் - நிவின் பாலி, சூரி, அஞ்சலி

இசை - யுவன் ஷங்கர் ராஜா

சென்னை: ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. சில வருட தாமதத்துக்கு பிறகு இன்று படமானது ரிலீஸாகியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.

வாழ்க்கையில் மரணமே வரக்கூடாது நீண்ட வருடங்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவோம் அல்லவா; ஒருவர் மரணமே இல்லாமல் பல்லாயிர வருடங்கள் வாழ்ந்தால் எப்படி இருக்கும்.. அவரது மனநிலைமை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா? அதைத்தான் ராம் இந்தப் படத்தின் மைய கருவாக எடுத்திருக்கிறார்.

எப்படி இருக்கு படம்?: மரணத்தை சந்திக்காமல் வாழும் நிவின் பாலியை; எதேச்சையாக ரயிலில் சந்திக்கும் சூரி; அவரை கடந்து செல்வதற்காக எழுப்பிவிட; அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். ராமின் படங்கள் என்றாலே அவர் பேசவரும் கருத்து முக்கியத்துவம் பெறும். கற்றது தமிழில் தமிழின் நிலைமை, தங்க மீன்களில் தந்தையின் நிலைமை, தரமணியில் பெண்ணின் நிலைமை, பேரன்புவில் அன்பு கொண்ட ஒரு மனிதனின் நிலைமையை பேசிய அவர்; இந்தப் படத்தில் சக உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்பதை பேசியிருக்கிறார்.

படத்தின் ப்ளஸ்: படத்தின் ப்ளஸ் என்றால் சந்தேகமே இல்லாமல் இயக்குநர் ராம்தான். ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாகவும் அதே நேரம் வீரியமாகவும் நகர்த்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார். அவருக்கு துணையாக கேமரா மேன் ஏகாம்பரம், நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி இருக்கிறார்கள். கேமராமேன் ஏகாம்பரத்தில் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம், காடு பகுதிகள் எல்லாம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. அந்த டீ கடை செட், தனுஷ்கோடி பகுதியெல்லாம் அவ்வளவு க்ளாஸ். மாற்று திறனாளியாக வரும் ராமின் உதவி இயக்குநரான அஸ்வின் விஜய்க்கு கண்டிப்பாக நடிப்பில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

படத்தின் மைனஸ்: முதல் பாதி பெரும்பாலும் ரயிலில்தான் நடக்கிறது. அதில் சூரியும், நிவின் பாலியும் பேசும் வசனங்கள் அவ்வப்போது ஈர்க்கின்றன. முக்கியமாக நிவின் பாலியின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் தொல்காப்பியத்தை பேசும் இடத்தில் எல்லாம் மனிதர் மயிர் கூச செய்கிறார். அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க சூரி முற்பட்டாலும் இதில் அவ்வளவாக அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. அஞ்சலியின் கேரக்டரை ரொம்பவே எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான். அவரால் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக ராமின் படங்களில் காதல் காட்சிகளுக்கு ஆயுள் அதிகம். இதில் எதையுமே செலுத்தாமல் செல்கின்றன. அது படத்தின் மைனஸாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் ராம் - யுவன் கூட்டணியில் இசை எப்படி இருக்கும் என்றும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதில் ம்ஹூம். பாடல் வரிகளில் நா. முத்துக்குமாரின் வெற்றிடம் அப்பட்டமாக தெரிகிறது. விரைவில் முத்துவுக்கு பதிலாக மாற்றை தேடிக்கொள்ளுங்கள் ராம் என்று சொல்ல தோன்றுகிறது.

ஏன் அப்படி?: படத்தின் மைய கதையில் எலிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சக உயிரை தாக்கக்கூடாது, அன்பு செலுத்துங்கள் என்பதுதான் அவர் கூற வரும் கருத்து. ஆனால் எலியை தூக்கி எறிந்துவிட்டார் என்பதற்காக சூரியை நிவின் பாலி தாக்கும் இடத்தையெல்லாம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதல் பாதி திரைக்கதை ரொம்பவே மெதுவாக சென்று பொறுமையை சோதிக்கிறது. இரண்டாவது பாதியில் அதை ஈடுகட்ட இயக்குநர் முயற்சி செய்திருந்தாலும்; அது பலன் அளிக்கவில்லை.

உயிர்களை கொன்றுகொண்டிருக்கும் சினிமாக்கள் அதிகம் வர தொடங்கியிருக்கும் தமிழ் சினிமாவில், 'சக உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள்' என்ற கருத்தோடு படம் வந்திருப்பது நல்ல விஷயம்தான். அதற்காக ராமுக்கு கை குலுக்கலாம். ஆனால் அதனை இன்னும் வீரியமாக பழைய ராம் ஸ்டைலில் சொல்லியிருந்தால் ஏழு கடல் ஏழு மலை தவிர்க்க முடியாத படமாக இருந்திருக்கும். இருந்தாலும் படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. தாராளமாக ஒருமுறை குடும்பத்தோடு சென்று பார்த்துவிட்டு வரலாம்.