📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 03, 2026 10:03 PM

வடகிழக்கு பருவமழை 20

வடகிழக்கு பருவமழை 20

தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. எனினும், அது இன்னும் முழுமையாக விலகவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 20 சதவீதம் மழை குறைவு

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது:

நாடு முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மழைப்பொழிவு 20 சதவீதம் குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை மழை குறைவாக பதிவாகியுள்ளது. அதேவேளையில், சில மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல்

இந்த ஆண்டு எல் நினோ காரணமாக வடகிழக்கு பருவமழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அதனைத் தொடர்ந்து வடகிழக்கு காற்று வீசத் தொடங்கும்.

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதிக்குள் தொடங்குவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் அதே காலகட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலைகள் தற்போது உருவாகி வருகின்றன.

கனமழை பெய்ய வாய்ப்பு

குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. கனமழை மற்றும் அதிகனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து செயல்படுவது அவசியம்.

ஜனவரி 15-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தொடர்பான கணிப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி 15-ந்தேதி வரை நீடித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும், இன்னும் 10 நாட்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.