📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 05:02 AM

வடசென்னையில் மேக வெடிப்பு: பாரிமுனையில் 27 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது

வடசென்னையில் மேக வெடிப்பு: பாரிமுனையில் 27 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது

வடசென்னையில் மேக வெடிப்பு: பாரிமுனையில் 27 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது

சென்னை: வடசென்னையில் நேற்று மேகவெடிப்பு போன்று கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக பாரிமுனைப் பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகியது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. குறிப்பாக வட சென்னையின் திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வடசென்னை பகுதியில் மட்டும் 1 மணி நேரத்திற்குள்ளாக 15 செ.மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர்ந்து நள்ளிரவு வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாரிமுனை பகுதியில் 27 செ.மீ மழை இரவு 11 மணி அளவில் பதிவாகியிருந்தது. சாத்தங்காடு 26 செ.மீ, திருவொற்றியூர் 19 செ.மீ, கார்கில் நகர் 18 செ.மீ, எண்ணூர் 17 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 13 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் வடசென்னை பகுதி முழுவதும் வெள்ளாக்காடானது. மேகவெடிப்பை போன்று வடசென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இந்நிலையில், சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

அதேபோல், சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது 19ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

மேலும், சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.