வர்த்தக முதலீட்டு முடிவுகளில் அரசாங்கத் தலையீடு இல்லை: மூத்த அமைச்சர் சண்முகம், சிங்கப்பூர் செய்திகள்
ஏர் இந்தியாவில் முதலீடு செய்யும் முடிவு சிங்கப்பூர் ஏர்லைன்சின் கையில் இருப்பதாகவும் தெமாசெக் நிறுவனம் ஏர் இந்தியாவின் நேரடிப் பங்குதாரர் இல்லை என்றும் மூத்த அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது முதலீட்டு முடிவுகளைப் பொறுப்புடன் எடுக்கும் என அதன் பங்குதாரரான தெமாசெக் நிறுவனம் எதிர்பார்க்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் இந்தியா முதலீடு தொடர்பில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் வெளியிட்ட பதிவு பற்றிச் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது திரு சண்முகம் அவ்வாறு கூறினார்.
இழப்புகளைச் சந்திக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்காகத் தெமாசெக்கின் நிதி பயன்படுத்தப்படக் கூடாது என்று திரு கென்னத் தியோங் கூறியிருந்தார்.
“தெமாசெக் குறித்துத் தெளிவுடன் இருப்போம். அந்நிறுவனம் தனது ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பிற்கும் அதன் நீண்டகாலச் செயல்திறனுக்கும் அரசாங்கத்திடம் பொறுப்புடைமை கொண்டுள்ளது.
“இருப்பினும், தனது தனிப்பட்ட முதலீடுகள் குறித்தோ தன் முதலீட்டுத் தொகுப்பில் உள்ள நிறுவனங்களின் தனிப்பட்ட முதலீட்டு முடிவுகள் குறித்தோ தெமாசெக் அரசாங்கத்திற்குக் கணக்கு காட்டத் தேவையில்லை,” என்று திரு சண்முகம் கூறினார்.
“பல்வேறு அபாயங்களும் வெவ்வேறு கால அளவுகளும் கொண்ட பரந்த முதலீட்டுத் தொகுப்பில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதைத் தெமாசெக்கும் அதன் துணை நிறுவனங்களுமே தீர்மானிக்கின்றன,” என்றார் அவர்.
தனிப்பட்ட முதலீட்டு முடிவுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என ஏற்கனவே பலமுறை கூறப்பட்டதையும் திரு சண்முகம் சுட்டினார். அவ்வாறு அரசாங்கமோ அரசியல்வாதிகளோ தனிப்பட்ட முதலீடுகளை வழிநடத்தத் தொடங்கினால் வர்த்தக ஒழுங்கு சீர்குலையும் என்று அவர் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“இதனால் முடிவுகள் அரசியல்மயமாகும். வர்த்தக அடிப்படையில் அல்லாமல் அரசியல் காரணங்களால் அவை வழிநடத்தப்படும். மற்ற நாடுகளில் இவ்வாறு நடப்பதைக் காண்கிறீர்கள்,” என்று திரு சண்முகம் கூறினார்.
இந்தியாவிலுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடு
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீடு செய்வது பற்றி அமரர் லீ குவான் யூ 2000 அல்லது 2001ல் கேள்வி எழுப்பியதாகக் கூறப்பட்டதைத் தாம் அறிவதாகக் கூறிய திரு சண்முகம், அக்காலம் மாறுபட்டிருந்தது என்றார்.
“அது 25 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். முற்றிலும் மாறுபட்ட இந்தியா, முற்றிலும் மாறுபட்ட சூழல். அப்போதும்கூட, அந்த முதலீட்டுக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அவர் கூறியிருந்தார். அப்போதும்கூட அந்த வர்த்தக முடிவு சிங்கப்பூர் ஏர்லைன்சின் கையில்தான் இருந்தது,” என்றார் அவர்.
இன்றைய இந்தியாவாக இருக்கட்டும், 25 ஆண்டுகள் கழித்த இந்தியாவாக இருக்கட்டும், அதனை மதிப்பீடு செய்து வர்த்தக முடிவுகளை எடுக்கும் உரிமை தெமாசெக்கிற்கும் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கும் இருக்கிறது என்று திரு சண்முகம் கூறினார்.
தெமாசெக், ஜிஐசி (GIC) ஆகிய நிறுவனங்களைத் தாண்டியும் சிங்கப்பூர் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சீனாவிலும் இந்தியாவிலும் சிங்கப்பூர் தலைசிறந்த முதலீட்டாளராக உள்ளது என்றார்.
“சிங்கப்பூர் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆசிய முதலீட்டாளர்; அமெரிக்காவில் மூன்றாவது மிகப்பெரிய முதலீட்டாளர்; ஆஸ்திரேலியாவில் ஏழாவது மிகப்பெரிய முதலீட்டாளர்,” என்று அவர் கூறினார்.
தெமாசெக்கின் இணையத்தளத்தின்படி, அதன் முதலீட்டில் 43 விழுக்காடு அமெரிக்காவிலும் சீனாவிலும், 7 விழுக்காடு இந்தியாவிலும் உள்ளதை அமைச்சர் சுட்டினார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அதன் மிகச் சிறப்பாகச் செயல்படும் சந்தையாக இருந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“எனவே, கடந்த 10 ஆண்டுகளில் தெமாசெக் மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. நீங்கள் பிஸ்னஸ் டைம்சைப் பார்த்தால், தெமாசெக் மற்றும் அதன் போர்ட்ஃபோலியோ நிறுவனங்கள் (TPCs) இந்தியாவில் செய்துள்ள வெற்றிகரமான முதலீடுகளுக்கான பல எடுத்துக்காட்டுகளைக் காண முடியும்,” என்றார் திரு சண்முகம்.