"விவாகரத்து, குடிப்பழக்கம்.. 26 நாள்கள் மறுவாழ்வு மையம்".. மோசமான நிலையில் இருந்து மீண்ட சாஹல்
"விவாகரத்து, குடிப்பழக்கம்.. 26 நாள்கள் மறுவாழ்வு மையம்".. மோசமான நிலையில் இருந்து மீண்ட சாஹல்
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் 188 போட்டிகளில் 233 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரராக முதலிடத்தில் இருப்பவர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். சர்வதேச அரங்கில் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். மைதானத்தில் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கடுமையான சோதனைகள், விவாகரத்து, தீவிர குடிப்பழக்கம் மற்றும் பீதித் தாக்குதல்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா உடனான பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
தனது குடிப்பழக்கம் பற்றி விவரித்த சாஹல், "ஆரம்பத்தில் இளம் வயதில் நண்பர்களுடன் பார்ட்டிகளில் குடித்தேன். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு என் மனநிலை மிகவும் மோசமானது. குடிப்பழக்கம் எல்லை மீறிப் போனது. இப்படியே சென்றால் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டே என் கையை விட்டுப் போய்விடும் என்பதை உணர்ந்தேன். உடனடியாக மதுவிலிருந்து விடுபட மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து 26 நாள்கள் தங்கி சிகிச்சை பெற்றேன். அந்த முடிவு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டேன்" என்றார்.
சமூக வலைதள விமர்சனங்கள் மற்றும் மன அழுத்தம் குறித்துக் குறிப்பிட்ட அவர், "என் வாழ்க்கையை மக்கள் பொதுவெளியில் விமர்சித்தது மனதை மிகவும் காயப்படுத்தியது. இதனால் எனக்குத் தீவிர பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. அப்போது என் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும். முகம் ஒரு மாதிரியாகச் சுருங்கி, உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். என்னால் சரியாகப் பேசக்கூட முடியாது. நான் 100 சதவீதம் முழு மனநிலையில் இல்லாததால் அணி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கிரிக்கெட்டிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்தேன்" என்றார்.
பின்னர் அதிலிருந்து மீண்டு புதிய தொடக்கத்தை மேற்கொண்டதாகக் கூறிய சாஹல், "பஞ்சாப் கிங்ஸ் அணி என்னை 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என தீவிரமாக உழைத்தேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 111 ரன்களைக் கட்டுப்படுத்தி வென்ற போட்டி எனக்குப் புது தெம்பைக் கொடுத்தது" என்றார். கடந்த 2025 ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுகளையும், 2026-ல் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாஹல், தற்போது தனது உடல்நலமும் மனநிலையும் சமநிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.