விஜய்க்கு ஒரே வெட்கம்.. விஜய் சேதுபதி அப்படி சொல்லிட்டாரே.. இடையில் என்ன ஆனதோ தெரியல
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனை தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி. நேற்று முன்தினம் அவர் லீடர்ஷிப் குறித்து பேசிய கருத்துக்கள் விஜய் ரசிகர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தின. பலரும் அவரை சோஷியல் மீடியாவில் சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார்கள். ஆனால் அவர் தன்னுடைய பேச்சில் விஜய்யின் பெயரையே உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே அவரது பேச்சுக்கள் எல்லாம் தத்துவமாகவே இருக்கும். இப்போது அந்த தொகுப்பாளர் பணியிலும் தன்னுடைய பேச்சு திறமையை நன்றாகவே காண்பித்துவருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனையும் சேதுவேதான் தொகுத்து வழங்குகிறார். எப்போதும் சில வாரங்கள் முடிந்த பிறகுதான் அந்த நிகழ்ச்சி விவாதத்துக்கு உட்படும். இப்போது சில நாட்களிலேயே அந்த நிலைமை வந்துவிட்டது.
என்ன நடந்தது?: நேற்று முன்தினம் பிக்பாஸ் போட்டியாளர் ஷாத்திகாவிடம் லீடர்ஷிப் குறித்து பேசினார் சேதுபதி. அப்போது அவர், "லீடர்னா என்னவென்று தெரியாமல் லீடர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாமல்; வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு; பிரச்னையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல் பழியை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதெல்லாம் ஏமாற்று வேலை; என்றார். இதில் அவர் விஜய் என்ற பெயரையோ, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றோ சொல்லவில்லை.
கொதிக்கும் ரசிகர்கள்: ஆனால் விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தங்கள் தளபதியைத்தான் சொல்கிறாரோ என்ற இன்செக்யூரிட்டியில் சேதுவை தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது தனிப்பட்ட விஷயங்கள், அவரது உருவம் உள்ளிட்ட அனைத்தையும் வைத்து இஷ்டத்துக்கு கிண்டல் செய்துவருகிறார்கள். விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தேர்தல் முடிவுகளுக்கு பிறகாவது மாறியிருப்பார்கள்; ஆபாசமாக பேசமாட்டார்கள் என்றே எல்லோரும் கருதினார்கள். ஆனால் முன்னைவிட இப்போது அதிகார தோரணையில் ஆபாசமாக பேசுகிறார்கள்.
கட்டுப்படுத்துவாரா விஜய்?: சங்கீதாவையே அவர்கள் ஆபாசமாகத்தான் பேசியிருந்தார்கள். அப்போதே அவர்களை விஜய் கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ அமைதியாக இருந்துவிட்டார். இனிமேலாவது விர்ச்சுவல் வாரியர்ஸை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விஜய் ஆவன செய்ய வேண்டும் என்பது பலரது கருத்து. இந்நிலையில் விஜய்யை குறித்து விஜய் சேதுபதி புகழ்ந்து பேசிய வீடியோவும் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் சேதுபதி சொன்னது: அதாவது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த அவர், "நான் உங்களுக்கு முத்தம் கொடுத்தபோதே தெரிந்திருக்கும் உங்கள் மீது எனக்கு பயங்கர லவ் இருக்கிறது என்று. விஜய் ரொம்ப ஸ்மார்ட்டாக, சூப்பராக இருக்கிறார். ரொம்ப அழகாக இருக்கிறார். முக்கியமாக அவர் வெட்கப்பட்டால் ரொம்ப அழகாக இருப்பார்" என்றார். உடனே விஜய்யும் வெட்கப்பட்டு சிரிக்க; அது க்யூட்டாக இருந்தது. அப்படிப்பட்ட விஜய் சேதுபதியைத்தான் இப்போது தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்.