வீரமணி பாலியல் வழக்கு; போலீஸ் கமிஷனருக்கு முதல்வர் விஜய் போட்ட நேரடி உத்தரவு
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் விஜய் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவரது வீட்டிற்கு நிறைய சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகளை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
வீரமணி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள், புகைப்படங்களை போலீசார் கைப்பற்றினர். இதனிடையே, வீரமணியும், அவரது கூட்டாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் சில சிறுமிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரும் தனிப்படைக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், வீரமணி மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் விஜய் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜூடன் கடந்த இரு தினங்களில் இரு முறை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விடக்கூடாது என்று அவர் நேரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.