வைபவ் சூர்யவன்ஷியிடம் சிக்சர் அடிக்கும் திறமையை திருட நினைக்கிறேன்.. சூர்யகுமார் கலகல
வைபவ் சூர்யவன்ஷியிடம் சிக்சர் அடிக்கும் திறமையை திருட நினைக்கிறேன்.. சூர்யகுமார் கலகல
மும்பை: டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ், இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடமிருந்து சிக்சர் அடிக்கும் திறனை திருட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த வலதுகை ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் 9000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் மூன்றாவது அதிக ரன் குவித்த வீரராகவும் திகழ்கிறார். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இருப்பினும், உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகும் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வரும் சூர்யகுமார், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலான ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து அவர் புகழ்ந்து பேசினார்.
வைபவின் இந்த அசத்தலான ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட சூர்யகுமாரிடம், தற்போதைய வீரர்களில் யாருடைய திறமையைத் திருட விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சூர்யா, ஒரு இளம் பையன் இருக்கிறான், அவனது பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வைபவ் சூர்யவன்ஷி. அவனது சிக்ஸர் அடிக்கும் திறனை நான் நிச்சயம் திருட விரும்புவேன்" என்று கூறினார்.
இந்த நேர்காணலின் போது, தான் எதிர்கொண்டதிலேயே மிகக் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ராவை சூர்யகுமார் தேர்வு செய்தார். "அவர் எனது அணியில்தான் இருக்கிறார், அவர்தான் பும்ரா" என தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியபோதும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியில் பும்ராவுடன் இணைந்து விளையாடியபோதும் நெட் பயிற்சியில் அவரை எதிர்கொண்டதை சூர்யா நினைவு கூர்ந்தார்.
இறுதியாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரில் யாரை அதிகம் பிடிக்கும் என்ற கேள்விக்கு, "நான் சச்சின் சாரை பார்த்துதான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். நான் சிறுவனாக இருந்தபோது அவரைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். ஆனால் ரோஹித்துடன் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். எனவே இதற்கு எனது பதில் 50-50 தான்" என்று சூர்யகுமார் யாதவ் பதிலளித்தார்.