ஊழியர்கள் வேலை நிறுத்தம்; 4 நாட்கள் வங்கிகள் இயங்காது
சென்னை: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
'வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும்' உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள், நாளை ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை, நாடு முழுதும் அறிவித்துள்ளன.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என, நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி கூறியதாவது:
வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில், உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்ச நடவடிக்கைகளை க ண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், இரண்டு கட்ட வேலைநிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும், 28 முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.