உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பிரதமர்; அதிரடி முடிவால் ஆச்சரியம்
உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பிரதமர்; அதிரடி முடிவால் ஆச்சரியம்
உலகிலேயே அதிகப்படியான சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம், மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலராக இருந்த பிரதமரின் ஆண்டு ஊதியம் தற்போது 3.6 மில்லியனாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டதட்ட 27 கோடி வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது. பிரதமரின் சம்பளம் கிட்டதட்ட 64 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, அந்​நாட்டு துணைப் பிரதமரின் ஆண்டு ஊதி​யம் ரூ.14.02 கோடி​யில் இருந்து ரூ.22.94 கோடி வரை அதிகரிக்​கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இதர அமைச்சர்களின் அடிப்படை ஊதியமும் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 1.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை உயர்த்தப்பட உள்ளது. அதாவது, அமைச்சர்களின் பதவி மூப்பு மற்​றும் அவர்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப சுமார் ரூ.13.5 கோடி முதல் சுமார் ரூ.21.59 கோடி வரை உயர்த்​தப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்பதற்காகவும், மக்களை அரசியலை நோக்கி இழுக்கவும் இவ்வாறு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக அந்நாட்டுத் அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், சாமானிய மக்கள் சம்பாதிக்கும் தொகையை விட அரசியல்வாதிகளின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஊதிய உயர்வால் கிடைக்கும் கூடுதல் தொகையைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.