உச்ச நீதிமன்றம்: அமைதியான முறையில் கூடுபவர்களைக் கைதுசெய்யக் கூடாது
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டவிரோத கைது நடவடிக்கையும் கூடாது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளும் இணையச் சேவையும் எந்த வகையிலும் தடைபடக்கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
சிஜேபி கட்சித் தலைவர்கள் விடுவிப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததற்காகக் கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் (சிஜேபி) தலைவர்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக, சிஜேபி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி காவல்துறை சனிக்கிழமை கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்தது.
அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நூற்றுக்கணக்கானவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிஜேபி கட்சித் தலைவர், நிர்வாகிகள் ஓராண்டு காலத்திற்கு நாட்டில் அமைதிகாக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சனிக்கிழமை மும்பையிலிருந்து விமானம் மூலமாக மூவரும் டெல்லியைச் சென்றடைந்த சில நிமிடங்களிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் மறுத்துள்ளன.
முன்னதாக, அவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்திருந்தது.
அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தன்னிச்சையாகக் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
ஆனால், ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரத் தூதரகம், ஐநாவின் அந்தக் கவலைகள் தவறானவை, நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளன என்று கூறி அக்கூற்றை நிராகரித்துள்ளது.
இப்படியொரு பிரதமரைக் கண்டதில்லை: தீப்கே
இதனிடையே, விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பிரதமர் மோடியை எக்ஸ் தளம் வழியாக அபிஜித் தீப்கே கடுமையாகச் சாடினார்.
“பிரதமர் மோடி நாட்டுக்குச் சங்கடமாக இருக்கிறார். இப்படியொரு கோழையை, அடாவடித்தனம் செய்பவரை இந்தத் தேசம் இதுவரை கண்டதில்லை. சிஜேபி ஒருபோதும் பின்வாங்காது, அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது. அக்டோபர் 10ஆம் தேதி சர்வாதிகாரத்தினுடைய முடிவின் தொடக்கமாக வரலாற்றில் இடம்பெறும்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.