📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 13, 2026 06:33 AM

‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ கடனால் மூடப்படுகிறது; வாடிக்கையாளர்களுக்கு $63,000க்கு மேல் இழப்பு

‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ கடனால் மூடப்படுகிறது; வாடிக்கையாளர்களுக்கு $63,000க்கு மேல் இழப்பு

சிங்கப்பூரில் உள்ள ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் கலைக்கப்பட்டு மூடப்படவுள்ளன. அவற்றின் பிரதான நிறுவனமான கொன்டாஃபார்மா சைனா ஹோல்டிங்ஸ், கடன் சுமையின் காரணமாக வணிகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா கிளைகள் திடீரென மூடப்பட்டதால் அவற்றின் உறுப்பினர்கள் $63,000க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 11 நிலவரப்படி, கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (அக்ரா) பிஸ்ஃபைல் பதிவுகளில், ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய இரண்டும் கலைக்கப்பட உள்ளது என்றும் கடனாளர்களின் விருப்பத்தின் பேரில் கலைக்கப்படும் நிலையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொன்டாஃபார்மா சைனா ஹோல்டிங்ஸ் வெளியிட்டுள்ள பங்குச்சந்தை அறிவிப்பில், தற்காலிக கலைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் மாதத்தில் சிறப்புப் பொதுக் கூட்டங்கள், கடனாளர்கள் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள ட்ரூ சிங்கப்பூர் குழுமத்தின் ஃபிட்னஸ், யோகா மையங்களை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது,” என்று அது கூறியுள்ளது.

சிங்கப்பூர் குழுமம் குறிப்பிடத்தக்க வருவாயைத் தொடர்ந்து ஈட்டி வந்தபோதிலும், பெரும் நட்டங்களையும் 400 மில்லியன் ஹாங்காங் டாலருக்கும் (S$64 மில்லியன்) அதிகமான நிகரக் கடன்களையும் பதிவு செய்து, கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழுமத்தின் தணிக்கை செய்யப்படாத நிர்வாகக் கணக்குகளின்படி, ஆகஸ்ட் 31, 2026ல் முடிந்த எட்டு மாதங்களில் ஏறக்குறைய 118.4 மில்லியன் ஹாங்காங் டாலர் வருவாயையும், அதே காலத்தில் சுமார் 19.1 மில்லியன் ஹாங்காங் டாலர் நட்டத்தையும் பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 31 நிலவரப்படி, இக்குழுமம் ஏறக்குறைய 204.5 மில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்பிலான மொத்த சொத்துகளையும், ஏறக்குறைய 633.8 மில்லியன் ஹாங்காங் டாலர் மொத்த கடன்களையும் ஏறக்குறைய 429.3 மில்லியன் ஹாங்காங் டாலர் நிகர கடன் சுமைகளையும் கொண்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவரான மெல்வின் யோங், இந்த மூடல் தொடர்பாகச் சங்கத்திற்கு 28 புகார்கள் வந்துள்ளதாகவும், பயன்படுத்தப்படாத உறுப்பினர் கட்டணங்கள், தொகுப்புகள், சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $63,000க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் 11 பிற்பகலில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விவரமறிய தற்காலிகக் கலைப்பாளரை சங்கம் தொடர்புகொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கான ஏற்பாடுகள் குறித்தும், அவர்கள் தங்களுடைய தொகையைத் திரும்பப் பெறுவதற்கான தகவல்கள் குறித்தும் கலைப்பாளரிடமிருந்து அறிய தொடர்ந்து முயற்சி செய்யப்படும்,” என்று மெல்விங் யோங் மேலும் தெரிவித்தார்.