தவெகவில் பில்லா ஜெகன் என்ட்ரி...வயிற்றில் புளியைக் கரைக்கும் நிர்வாகிகள்!
தவெகவில் பில்லா ஜெகன் என்ட்ரி...வயிற்றில் புளியைக் கரைக்கும் நிர்வாகிகள்!
பில்லா ஜெகன் தவெகவில் இணைய முயற்சி செய்து வரும் நிலையில், அவரது வருகையால் கட்சியில் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வில் இருந்த தூத்துக்குடி மாவட்ட விஜய் நற்பணி மன்றத் தலைவர் பில்லா ஜெகன், தற்போது த.வெ.க.வில் இணையும் முயற்சியில் இருக்கிறார். இதனால், தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என எண்ணும் உள்ளூர் த.வெ.க.வினர் பில்லா ஜெகனுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதால், உப்பு மண்ணில் சலசலப்பு எழுந்திருக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தவெக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்றம் என்றால், அது பில்லா ஜெகன் தான் நினைத்த நேரத்தில் புஸ்ஸி ஆனந்தை சந்திப்பார். எஸ்.ஏ.சந்திர சேகரின் செல்லப் பிள்ளைபோல் இருந்தார். ரசிகர் மன்றம், நற்பணி இயக்கமாக மாறிய பிறகும் ஜெகன் அதில் தொடர்ந்தார். அதேநேரத்தில் திமுகவில் இணைந்து தூத்துக்குடி மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்தார். முன்னாள் திமுக மா.செ.பெரியசாமியுடனான மனக்கசப்பில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளராக மாறினார். அதனாலேயே விஜய் கட்சி தொடங்கியபோது அதில் அவர் இணையவில்லை. தனக்கு பதில் தங்கை என்கிற திட்டத்தோடு தன் தங்கை அஜிதா ஆக்னலை தவெகவுக்கு அனுப்பினார். ஆனால் அஜிதாவால், த.வெ.கவில் நீடிக்க முடியாமல் தி.மு.கவில் பயணித்துவருகிறார்.
இந்த நிலையில்தான் பில்லா ஜெகன், த.வெ.க.வில் இணையவிருப்பதாகவும், அதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஜெகனின் ஆதரவாளர்களும், விஜய்யுடன் பில்லா ஜெகன் இருக்கும் படங்களையும், விஜய் பட வசனங்களையும் போட்டு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது உள்ளூர் தவெக நிர்வாகிகள் பலரது வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
குறிப்பாக, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துடன் நெருக்கமாக இருக்கும் சிலருக்கு வியர்த்துக் கொட்டுகிறதாம். அதைத் தொடர்ந்து ஸ்ரீநாத்திடம் அவர்கள், 'த.வெ.க.வில் இருக்கும் ஆரம்பகால விஜய் ரசிகர்களில் 50 சதவிதத்தினர் ஏற்கெனவே பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பில்லா ஜெகன் வந்தால் அவர்கள் அவர் பின்னால் அணிவகுப்பார்கள். பில்லா ஜெகனும் விட்டதை பிடிக்க நினைப்பார். இதனால் உங்களுக்குத்தான் ஆபத்து. அவரை கட்சியில் சேர்க்க விடாதீர்கள்' என்று தூபம் போட்டுவருகிறார்கள்" என்றார்கள்.
இதுகுறித்து அமைச்சர் ஸ்ரீநாத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூத்துக்குடி தவெக மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் மற்றும் தொழிலதிபர் கிஷோர் ஆகியோரிடம் கேட்டோம். இருவரும் பேச மறுத்துவிட்டனர். அவர்களின் ஆதரவாளர்களோ, "பில்லா ஜெகன் வருவதால் கட்சியில் யாருக்கும் பயமில்லை. அவரின் தங்கை அஜிதா ஆக்னலால் பட்ட அவமானங்களை கட்சித் தலைமை மறந்துவிடாது.
அதனால் பில்லா ஜெகனை கட்சியில் சேர்ப்பார்களா என்பது சந்தேகம்தான். அவர் பின்னால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருப்பதாக சொல்வதிலும் உண்மை இல்லை. விஜய்தான் கட்சி என்பதால் எந்த தனிநபரை வைத்தும் தவெ.க இல்லை. ஜெகன் விவகாரம் பற்றி அமைச்சர் ஸ்ரீநாத் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை" என்றார்கள்.
தவெகவில் இணைவது உண்மைதானா என பில்லா ஜெகனிடம் கேட்டோம் "உண்மைதான். தவெ.கவில் இணைய முடிவெடுத்து சென்னைக்கு வந்துவிட்டேன். பொதுச்செயலாளர் ஆனந்தின் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்" என்றார்தூத்துக்குடி தவெ.கவில் எப்போதுமே தகிப்பு தான்!