📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 12:03 AM

தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு செய்தது போல, நானும் ஒரு AI வீடியோ வெளியிடுவேன். பார்க்கிறீர்களா? என செய்தியளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

Published : October 6, 2026 at 10:51 PM IST

சென்னை: தவெக வேட்பாளர் சத்தியபாமா தொடர்பாக வெளியான வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று ஆய்வு செய்தார். அயனாவரம் பகுதியில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை அமைச்சர் அணிவித்தார்.

தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்தார். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு‘ சென்ற அமைச்சர், பள்ளி வளாகத்தை ஆய்வு செய்ததுடன், மாணவர்களுடன் கைப்பந்து விளையாடினார்.

இதன் பின்னர் அயனாவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் சத்தியபாமா தொடர்பாக ரூ.31 கோடி செலவு செய்தது குறித்து வெளியானதாக கூறப்படும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "அது AI வீடியோதான். ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு செய்தது போல, நானும் ஒரு AI வீடியோ வெளியிடுவேன். பார்க்கிறீர்களா?" என்றார்.

இதன் பின்னர் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து வரும் 9 ஆம் தேதி பேசுகிறேன்" என்றார்.

தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பேசிய அவர், "சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள் இருக்கிறது. வில்லிவாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளாக அந்த பிரச்சனை உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பிரச்சனை மட்டுமின்றி, கழிவுநீர் கால்வாய் பிரச்சனையும் உள்ளது" என்றார்.

பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர், "சென்னை முழுவதும் மழைக்காலப் பணிகளைத் தொடங்க உள்ளோம். பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகளில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை எந்தவித முறைகேடும் இல்லாமல் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.