📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 10:02 PM

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?'

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?'

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

உண்மையில் பாமகவை அமைச்சரவையில் சேர்க்க விசிகவை முதலில் சமாதானம் செய்ய வேண்டும். மேலும், 8 தலித்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துவிட்டு அதைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே, பாமகவையும் அமைச்சரவைக்குள் சேர்த்தால் தவெகவின் சுய வாக்கு வங்கிக்குள்ளேயே குழப்பம் ஏற்படும்.

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் தவெகவினர் பரப்பி வரும் இந்தத் தகவலுக்குப் பின்னால் ஓர் இடைத்தேர்தல் கணக்கும் ஒளிந்திருக்கிறது என்கின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரம் அறிந்த சிலர், ''இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வென்றே ஆக வேண்டுமென முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். இரண்டு தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக தவெக தலைமை நினைக்கிறது.

அந்த வெற்றியை உறுதி செய்யவே பாமகவை வைத்து சில கணக்குகளை தவெக தலைமை தீட்டியிருக்கிறது. மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்றனர். இவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

அதனால்தான் திரைமறைவில் 'தவெகவுக்கு நட்பு சக்தியாகவே இருங்கள். சரியான சமயத்தில் உங்களுக்கான உரிய கௌரவத்தை முதல்வர் செய்வார்' என தவெக தரப்பில் பாமகவுக்கு உறுதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனும் முடிவை பாமக எடுத்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலை பாமக பாஜகவோடு எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டும் பாமக 16,965 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது பதிவான வாக்குகளில் 9.57% ஆகும். ஆக, பாமகவுக்கு அந்தத் தொகுதிக்குள் 10% வாக்கு வங்கி உறுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுகவோடு கூட்டணியில் இருந்தது. மதுராந்தகத்தில் அதிமுக வென்றது. அதிமுகவுக்கும் இரண்டாவது இடம் பிடித்த தவெகவுக்கும் கிட்டத்தட்ட 8000 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசத்தை உண்டாக்கியது பாமகவின் வாக்கு வங்கிதான். அந்தப் பாமகவை இப்போது அதிமுகவுக்கு ஆதரவளிக்க விடாமல் தவெக தடுத்துவிட்டது.

இப்போது அந்தப் பாமக ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் அதிமுகவை விட குறைந்தபட்சமாக 10000 வாக்குகள் வித்தியாசத்தில் மதுராந்தகத்தை வெல்லலாம் எனத் தவெக நினைக்கிறது. இதை மனதில் வைத்துதான் வன்னிய சமூக அமைச்சர்களை தவெக பிரசாரத்தில் இறக்கிவிட்டிருக்கிறது.

மேலும், அமைச்சர் ஆதவ் பேசும் போதும் தவெக 18 வன்னிய சமூக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என வெளிப்படையாகப் பேசுகிறார். இதையெல்லாம் கடந்து முழுமையாக பாமக ஆதரவு வாக்குகளை இழுக்கத்தான் பாமக தவெகவின் அமைச்சரவையில் இணைகிறது, சௌமியா அன்புமணிக்கு முக்கியத் துறை கொடுக்கப்படுகிறது என்கிற தகவல்கள் ஆளும் தரப்பிலிருந்தே கசியவிடப்படுகிறது

உண்மையில் பாமகவை அமைச்சரவையில் சேர்க்க விசிகவை முதலில் சமாதானம் செய்ய வேண்டும். மேலும் 8 தலித்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துவிட்டு அதை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாமகவையும் அமைச்சரவைக்குள் சேர்த்தால் தவெகவின் சுயவாக்கு வங்கிக்குள்ளேயே குழப்பம் ஏற்படும்.

இத்தனை தலைவலிகள் இதில் இருக்கிறது. நிஜமாகவே பாமகவை அமைச்சரவையில் சேர்த்தால் முதலில் இதையெல்லாம் சரிகட்ட யோசிக்க வேண்டும். இதையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்வோம். முதலில் தகவலை மட்டும் பரப்பி பாமகவின் ஆதரவு வாக்குகளைத் திரட்டி மதுராந்தக வெற்றி உறுதி செய்துவிடுவோம் என்கிற மனநிலையில் இருக்கிறது தவெக தலைமை' என்கின்றனர்.

விஜய் போடும் கூட்டல் கழித்தல் கணக்கு பலிக்குமா?