📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 16, 2026 09:03 PM

தவெக அமைச்சர்களுக்கு பாஜகவை விமர்சிக்கத் துணிவில்லை

தவெக அமைச்சர்களுக்கு பாஜகவை விமர்சிக்கத் துணிவில்லை

தவெக அமைச்சர்களுக்கு பாஜகவை விமர்சிக்கத் துணிவில்லை- கனிமொழி கடும் விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

Published : October 16, 2026 at 8:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள், பாஜகவை விமர்சிக்க துணிவின்றி, எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டுகின்றனர் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (அக்.16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, "ஒன்றிய அரசு போராடும் இளைஞர்களைப் பார்த்து நக்சலைட் என்று கூறுகின்றது. அரசியல் அமைப்பு ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அடித்து நொறுக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. அதனால்தான் நாடாளுமன்றம் நடக்கும் நாட்களைக் குறைத்து வருகிறது.

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு என்றாவது ஒருநாள் தான் வருகிறார். அவர் சொல்ல வேண்டிய கருத்துக்களை மட்டும் தான் பேசுவார்; கேள்வி நேரங்களுக்குகூட பிரதமர் வரமாட்டார். நாடாளுமன்றம் நடக்கும்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்துக் கொண்டிருக்கிறார். எந்த நாடுகளிலும் இப்படி ஒரு அவலம் நடந்ததே இல்லை.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், மக்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இல்லாமல், ஒன்றிய அரசு உள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்திற்கான குழுவில் ஆளுங்கட்சி சார்பில் 2 பேரும், வெளியில் இருந்து ஒருவரையும், எதிர்க்கட்சியினர் ஒருவரையும் போடுவார்கள். இரண்டு பேர் எந்த முடிவை எடுத்தாலும், எதிர்க்கட்சிச் சேர்ந்தவர் எந்த கருத்தை சொன்னாலும், அந்த கருத்து அங்கு செல்லாது. எல்லாமே கண் துடைப்பு தான்.

இந்த நாட்டில் அதிகாரம் படைத்தவர்கள், எல்லாம் முடிந்ததற்கு பிறகுதான் வாய்யைத் திறப்பார்கள். சிறப்பு தீவிரத் திருத்தத்தில் 13 கோடி வாக்காளர்களை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. எஸ்ஐஆரில் வாக்களிக்க கூடிய 13 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 74 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளார்கள். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் நீக்கப்பட வேண்டிய வாக்காளர்கள் 20,000 பேர் தான்.

ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய கருத்துகளுக்கு யார் தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள் என்பதைக் கணித்து ஒவ்வொரு தொகுதிகளிலும், யார் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு பெயரை நீக்கிவிடுகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்ல எத்தனையோ மாநிலங்களில் இதைதான் அவர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறையினர் குடிமக்களின் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். ஞானேஷ் குமார் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வாக்களார் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் பெயர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும்.

யாருக்கெல்லாம் வாக்குரிமை, அடிப்படை உரிமை ஆக்கப்பட்டதோ, அவர்களுக்கு எல்லாம் மீண்டும் அந்த உரிமை அவர்களுக்கே செல்ல வேண்டும். எஸ்ஐஆர் வந்தபொழுது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதன் சாதகங்களை மக்களுக்கு எடுத்து கூறி வந்தார். இன்று அதனுடைய ஆபத்துகளை உணர்ந்து கொள்ளாமல் இருந்த காரணத்தால், எத்தனையோ மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உள்ளது. ஆனால் இந்த மண்ணில் சுயமரியாதை என்ற ஒன்று இருக்கும் வரை, தந்தை பெரியாரின் வார்த்தைகள் இருக்கும் வரை, இங்கே எதுவும் செய்ய முடியாது. போராடுபவர்களுக்கு திமுக உடன் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., "தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தற்போது நாடு முழுவதும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும். போராட்டம் தொடரும்; தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள், பாஜகவை விமர்சிக்க துணிவின்றி, எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கொளத்தூர் தொகுதியில் நடந்தது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெளிவாக விளக்கியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.