தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக சட்டமன்ற கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்.
பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம். அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைக்க தவெக நாடகம் நடத்துகிறது. அரசு அமைக்க போதிய பலமில்லாததால் அதிமுகவை சேர்ந்தவர்களை தவெக தாஜா செய்கிறது. தவெக அரசை ஆதரித்த கட்சிகள் எதிரப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரிடம் பேசுகின்றனர். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம்.
சட்டப்பேரவையில் தவெக ஆட்சியில் நடந்துள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் பதிலளிப்பது இல்லை. பட்ஜெட் தாக்கலானது முதல் மானியக் கோரிக்கை வரை, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள்தான் (ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன்) பதில் சொல்கிறார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை தற்போது பேசி அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளை பேசுகின்றனர். நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்வர் பதில் சொல்லவில்லை. ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு முதல்வரிடம் பதில் இல்லை. காவலர்களின் கோரிக்கைகள் குறித்த என் கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை. நகராட்சி துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு கோப்புகள் வருகிறது. ஆனால் பதில் வேறு அமைச்சர் அளிக்கிறார். தேவையில்லாத விவாதங்களால் சட்டப்பேரவை நேரம் தினசரி 7 மணி நேரம் வீணடிக்கப்படுகிறது.
தவெகவின் ஆட்சி செயலிழந்த ஆட்சியாகத்தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தவெக ஆதரவு கட்சியான இடதுசாரி கட்சியே கூறுகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த இடதுசாரிகள் குறைகூறும் அளவுக்குத்தான் அரசு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொல்லும் காட்சிகள் செய்திகளில் வருகிறது. ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி வந்த பிறகு தான் லஞ்சம், ஊழல் அதிகமாகிவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எல்லா ஆட்சியிலும் செயல்பட்டுத்தான் வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் மட்டும்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பது போல ரீல்ஸ் போடுகின்றனர்.
முதல்வர் வசம் உள்ள துறை மீது மற்றொரு அமைச்சர் பதிலுரை தருகிறார். இனியாவது முதல்வர் தனது துறையை கண்காணித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும். தவெக ஆட்சி அமைத்த பின் அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. நெல் கொள்முதல் செய்யாததால் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதம் அடையும் அளவுக்கு சூழல் உள்ளது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தற்போதுள்ள ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இவ்வளவு கடன் இருக்கும்போது இவ்வளவு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஏற்கனவே கடன் இருக்கும்போது புதிய திட்டங்களுக்கு எங்கிருந்து வருவாய் வரும்? மீண்டும் யார் கடனை அடைப்பது? மக்களின் வரிப்பணம் தானே கடனாக செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக புதிய தலைமை செயலகம் தேவையா?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அதிமுகவும் தவெகவும் ஒன்று தான் என்று சொல்லியிருக்கிறாரே? அதாவது அன்றைக்கு நான் சட்டமன்றம் வரவில்லை. எல்லோரும் குரல் கொடுத்தார்கள். அதிமுக என்பது பொன்விழா கண்ட கட்சி. தவெக கட்சி ஆரம்பித்தே 3 வருடம் தான் ஆகிறது. விபத்தில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த கட்சி. ஆக்கி வைத்த சாப்பாட்டை சாப்பிடுவது மாதிரி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. வேறு ஒன்றும் புதிதாக அவர்கள் சாதிக்கவில்லை. வேறு என்ன புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். புதிய தலைமைச்செயலகம் கட்டுவோம் என்கிறார்கள். இதற்கு என்ன அவசியம்? பார்முலா கார் பந்தயம் நடத்த நிதி ஒதுக்குவோம் என்கிறார்கள். இது நாட்டுக்கு தேவை. நிதி ஆதாரத்தை பெருக்கி அதற்கு பிறகு செயல்படுத்துங்கள்.
முதல்வர் அறை மாற்றம். ஏற்கனவே அண்ணா காலத்தில் இருந்து அந்த அறைக்கு நான், அதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்து அந்த அறையை பயன்படுத்தினார். இப்போது அந்த அலுவலகம் அவருக்கு போதவில்லையாம். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்மணிகளை பாதுகாக்க முடியவில்லை. தார்பாய்கள் கூட வாங்கிக்கொடுக்க முடியவில்லை. அதற்கு நிதி கிடையாது. ஆனால் தலைமைச்செயலகம் கட்டுவதற்கு ரூ.1200 கோடி செலவு செய்யப்படுமாம். எந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு திட்டங்களை கொண்டு வந்தால் பரவாயில்லை. இந்த அரசு ரீல் விடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என்றார்.