தவெக ஆட்சி நீடித்தால் பொருளாதார வீழ்ச்சி நிச்சயம்
தவெக ஆட்சி நீடித்தால் பொருளாதார வீழ்ச்சி நிச்சயம் - நயினார்
தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவை தோற்கடிக்க, உலகத்தில் ஒருவர் பிறந்து தான் வரவேண்டும். தமிழகத்தில் வேண்டுமானால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம். வருங்காலங்களில் பாஜ தமிழகத்தில் முழு அதிகாரத்தையும் பதிக்கும் என்பதை ஆதவ் அர்ஜூனாவுக்கு தெரிவித்து கொள்கிறேன். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தேவையில்லாத தேர்தலாகும். எம்எல்ஏவாக தேர்வானவர்கள், உடனடியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளதால் அதில் குதிரை பேரம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 144 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. இதில், கற்பழிப்பு வழக்கில் 30 பேர் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தவெகவுக்கு மக்களை பற்றி சிந்திக்க கூடிய எண்ணம் இல்லை. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் கிடையாது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மின்வெட்டு அதிகமாகி கொண்டிருக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் மட்டுமே தவெக ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சி நீடிக்குமானால் இன்னும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். ஒரே தொகுதியில் முதலமைச்சர் 35 இடங்களில் பிரசாரம் செய்கிறார் என்றால், அவருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.