📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 01:01 PM

தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்: ப்ரீத்தி முகுந்தன்

தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்: ப்ரீத்தி முகுந்தன்

‘லப்பர் பந்து’ திரைப்படப் புகழ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது திரைப்பயணம், படத் தேர்வு, சினிமா தந்த அனுபவங்கள் குறித்து அவர் அண்மையில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும் விதம் மிகவும் முக்கியமானது. அவர்கள் விவரிக்கும் விதம் நன்றாக இருந்தால் பாதிக் கதை சொல்லி முடிப்பதற்கு முன்பே அந்தப் படத்தில் நான் நடிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்து விடுவேன்.

“குறிப்பாக, கதாநாயகிகளுக்குக் கதையில் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும்போது, இயக்குநர்மீதும், அந்தப் படத்தின்மீதும் எனக்குப் பெரிய நம்பிக்கையும் தைரியமும் ஏற்படுகிறது,” என்றார்.

“சினிமாவின் ஆரம்பக் காலகட்டங்களில் சில கதைகளை நான் தவறாகக் கணித்துத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், அதன்பிறகு படிப்படியாக என் அனுபவத்தின் மூலமே எப்படிக் கதைகளைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

“இப்போது நான் ஓர் இயக்குநரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றால், அதற்கு முன்பாகவே அவருடைய முந்தைய படங்களைப் பார்த்து, அவருடைய இயக்கம், அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பேன். அதன்பின்னர், அதை அவர் சொல்லும் திரைக்கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்து இறுதி முடிவை எடுப்பேன்.

“நான் இதுவரை பத்துத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பேனா என்பதைக் கண்டறிய குரல் சோதனை செய்வது இப்போது சாதாரணமாகிவிட்டது.

“நான் ஒரு முன்னணிக் கதாநாயகி என்பதால் குரல் சோதனையிலிருந்து விலக்கு அல்லது சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தது கிடையாது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“அதற்குச் சிறந்த உதாரணம், இப்போது நான் நடித்து வரும் தனுஷ் படத்திற்குக்கூட நான் முறையாகக் குரல் சோதனை செய்த பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டேன்,” என்று ப்ரீத்தி முகுந்தன் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் ப்ரீத்தி முகுந்தன், தனுஷ் படத்திலும் குரல் சோதனை மூலமே தேர்வாகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுவதாகப் பலர் பாராட்டுகின்றனர்.