தமிழ்நாட்டின் முண்டியம்பாக்கம்
தமிழ்நாட்டின் முண்டியம்பாக்கம் - பஞ்சாபின் சாஹ்னேவால் இடையே பார்சல் சரக்கு விரைவு ரயில் சேவை தொடக்கம்
இந்த பார்சல் சேவை, தென்னிந்தியாவிற்கும் பஞ்சாபின் தொழில்சார் மண்டலங்களுக்கும் இடையே வணிகப் பொருட்களின் வேகமான போக்குவரத்திற்கு வழிவகுத்துள்ளது.
Published : October 5, 2026 at 8:55 PM IST
சென்னை:தமிழ்நாட்டின் முண்டியம்பாக்கம் - பஞ்சாபில் உள்ள சாஹ்னேவால் இடையே பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும் இயங்கும் இந்த ரயில் சேவையை, அக்டோபர் 3ஆம் தேதி, குத்தகை அடிப்படையில் சென்னை கோட்டம் தொடங்கி உள்ளது.
இந்த பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயிலை (PCET) இயக்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஃப்ரெய்ட் ஃபார்வர்டர் நிறுவனத்திற்கு 2026 அக்டோபர் 3ஆம் தேதி முதல், 2032 அக்டோபர் 2ஆம் தேதி வரை என 6 ஆண்டுக கால அளவில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் முதல் சேவை அக்டோபர் 3ஆம் தேதி முண்டியம்பாக்கத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. ஆடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்னணுப் பொருட்கள் என 267.9 டன் வணிகப் பொருட்களைச் சுமந்து இந்த சரக்கு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் 392 டன் கொள்ளளவு கொண்ட 16 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பார்சல் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, முண்டியம்பாக்கம் - சாஹ்னேவால் வழித்தடத்தின் முதல் பயணத்திற்காக 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி உட்பட 15.63 லட்ச ரூபாயை குத்தகைதாரர் ஆன்லைன் மூலம் செலுத்தினார். இதன்மூலம், சென்னை கோட்டத்தில், பார்சல் ஏற்றுவதற்கான டிஜிட்டல் கட்டண முறை வெற்றிகரமாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது.
இந்த பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தென்னிந்தியாவிற்கும் பஞ்சாபின் தொழில்சார் மண்டலங்களுக்கும் இடையே வணிகப் பொருட்களின் வேகமான போக்குவரத்திற்கு வழிவகுத்து, பார்சல் சேவைகளையும் துரிதமாக வழங்குவதற்கும் உதவியாக அமைந்துள்ளது.
மேலும், வியாபார பொருட்களை ஏற்றிச் செல்வதில் இந்திய ரயில்வேயின் பங்களிப்பை மேம்படுத்துவதுடன் வர்த்தக நிறுவனங்களுக்குப் பாதுகாப்பான, திறமையான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வாய்ப்பையும் இந்த முயற்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சல் சேவைகளை நவீனப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல், ரயிலில் சரக்கு போக்குவரத்து வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் சென்னை கோட்டம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் இந்த சேவை எடுத்துக்காட்டுகிறது.