📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 16, 2026 01:04 AM

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை

புதுடில்லி: 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்ளையும், தகுதியானவர்களையும் சேர்ப்பது தொடர்பான முக்கியமான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

எஸ்ஐஆர் முறையில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு சுருக்கமுறை திருத்தம்( special Summary Revidion) மேற்கொள்ளப்பட உள்ளது.2027 ஜனவரி 1ஐ தகுதி நாளாக கொண்டு இப்பணி நடக்க உள்ளது.

இந்தப் பணி தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார், பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மபி, குஜராத், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், கோவா, அசாம், மணிப்பூர் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் நடக்க உள்ளது.

பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய நடைமுறை!

வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக பெயர் நீக்குவதை தடுப்பதற்கு புதிய வழிகாட்டுதல்களையும் தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:

*ஒரு தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 2 சதவீதத்திற்கும் மேல் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை ஓட்டுப்பதிவு அதிகாரி நேரில் சென்று சரிபார்க்க வேண்டும்

*ஒரு குறிப்பிட்ட நபர், 5 நபருக்கு அதிகமான பெயர்களை நீக்கக் கோரி விண்ணப்பித்தால், அதையும் நேரில் சென்று தேர்தல் அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்

*பெயர் நீக்கம் செய்யப்படும்போது, அதற்கான காரணங்களை அதிகாரி குறிப்பிட்டு, அதை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்

*அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 படிவங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் சமர்ப்பித்தால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வர்.

*ஒருவர் மொத்தமாக பலரது பெயர்களை நீக்குவதற்கு விண்ணப்பம் செய்வதை தடுக்க, தனிநபர் தாக்கல் செய்யும் படிவம் - 7ன் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.