“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குக”
ஞானேஷ் குமார், கபில் சிபல்
புதுடெல்லி: தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெறாத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று கபில் சிபல் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து கபில் சிபல் கூறியது: “தேர்தல் ஆணையத்தில் அரங்கேறும் முறைகேடுகளை பார்த்த சிலருக்கு மனசாட்சி உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் அவருக்கு, மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் கடந்த 10 மாதங்களில் 14 முடிவுகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஞானேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து, எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்த வேண்டும். பிஹார் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோரான பிரிட்டஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேர்தல் ஆணையம் மறுப்பு
இந்தச் சூழலில் எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.