தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இளைஞர்கள் போராட்டம்
தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாணவர் இளைஞர்கள் போராட்டம்
சென்னை,: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஞானேஷ்குமாரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தலைமை தேர்தல் ஆணையர் வேடமணிந்து, கைக்கு விலங்கு போட்டு இழுத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதே போல், காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் சிபிஐஎம் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 115 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலம் ஜங்ஷன் ரயில்ேவ ஸ்டேஷன் முன் இளைஞர்கள், மாணவர்கள் திரண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். தொடர்ந்து எஸ்ஐஆர் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறித்த ஞானேஷ்குமாரை கண்டித்தும், பதவி நீக்கக்கோரியும் கோஷமிட்டவாறு ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட முன்னேறினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்படவே அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முரண்டுபிடித்ததால், குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். நிர்வாகிகள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆதார் கார்டை போலீசார் கேட்டதற்கு மாணவர்கள், இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் சார்பில் நாகர்கோவில் உள்ள கலெக்டர் அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 இடங்களில் நடந்த மறியல் போராட்டங்களில் 29 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை வண்ணாரப்பேட்டை, அம்பாசமுத்திரம், வள்ளியூர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடந்தது.