📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 11:05 PM

“திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீதான விசாரணையை தடுத்தது யார்?”

“திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீதான விசாரணையை தடுத்தது யார்?”

சென்னை: “திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார பலமிக்க ஜெம் வீரமணி மீதான விசாரணையை தடுத்தது யார்? இன்னும் இந்த வழக்கில் யாரை காப்பாற்ற கடந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்? இந்த கேள்விகளுக்கு திமுகவினர் தான் பதிலளிக்க வேண்டும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் யாருடைய வாழ்வாதாரத்தையும் அழிக்கும் விதமாக செயல்படும் ஆட்சி இதுவல்ல. சொல்லிவிட்டோம், அதை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம்பிடிப்பவர்களும் நாங்கள் அல்ல.

அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியது தவெக அரசு. பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் குறித்து முதல்வர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக கூட்டணி உறுதியாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் எங்களுக்கு மூத்தவர்கள். அவர்கள் எங்களுக்கு வழிகாட்டுகின்றனர். அவர்களுடன் இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்.

ஜெம் வீரமணி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி வீடியோ கிளாரிட்டியாக இல்லை என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. அவருக்கு ஹெச்.டி. வீடியோ தான் வேண்டுமா என்ன? முன்பு இந்த வழக்கை மூடுவதற்கு உத்தரவிட்டது யார்?

திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார பலமிக்க வீரமணி மீதான விசாரணையை தடுத்தது யார்? இன்னும் இந்த வழக்கில் யாரை காப்பாற்ற கடந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்? இந்த கேள்விகளுக்கு திமுகவினர் தான் பதிலளிக்க வேண்டும்.

இந்த வழக்கு முதல்வரின் தனி கண்காணிப்பில் இருக்கிறது. நிச்சயமாக யாரும் தப்பிக்க முடியாது. மூடி மறைக்கப்பட்ட அத்தனை வழக்குகளும் தவெக ஆட்சியில் திறக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்” என்று அவர் கூறினார்.