தேசிய விருது வென்ற சச்சனா.. விழாவில் கட்டியிருந்த புடவையில் இவ்வளவு விஷயமா?.. சூப்பரா இருக்கே
சென்னை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் மகாராஜா. மெகா ப்ளாக் பஸ்டர் ஆன அந்தப் படத்தில் சேதுவுக்கு மகளாக சச்சனா நடித்திருந்தார். அவரது கேரக்டர்தான் படத்தின் மையமாக இருந்தது. சூழல் இப்படி இருக்க சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் சேதுபதி தனது 50வது படமாக மகாராஜா படத்தில் நடித்தார். அதனை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். சேதுவுடன் சச்சனா, அனுராக் கஷ்யாப், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலிலும் 100 கோடி ரூபாயை அள்ளியது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இப்படத்துக்கு அதீத வரவேற்பு கிடைத்தது. இப்போது ஹாலிவுட்டிலும் அந்தப் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சனாவுக்கு தேசிய விருது: இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் சச்சனாவுடையது. அந்தக் கேரக்டரை மையப்படுத்திதான் கதை நகரும். அதனை உணர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். பல தரப்பிடமிருந்து பாராட்டுக்களும் கிடைத்தன. சூழலி இப்படி இருக்க அவருக்கு தேசிய விருதும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நேற்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் புடவை கட்டியபடி சென்று அந்த விருதை பெற்றுக்கொண்டார்.
ஆடை பற்றி சச்சனா: அவரது ஆடை நேற்று பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாரம்பரியம், கலை, ஒரு கனவு என ஒவ்வொரு நூலிலும் பின்னப்பட்ட ஒரு கதை. ஒரு விருதை கொண்டாடுவதற்கு மட்டுமில்லை; நான் எங்கிருந்து வந்தேன், நான் சுமந்து வரும் கலை, என்னை இங்கே அழைத்து வந்த பயணம் ஆகியவற்றை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட தோற்றம் இது.
இந்த பிரத்யேக உடை பாரம்பரிய தமிழ் கலை நயத்தையும், நவீன நேர்த்தியையும் அழகாக இணைக்கிறது. யானைத்தந்த நிறத்தில், புடவை பாணியிலான கோட் சூட்தான் இது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், கோயில்கள், தமிழ்நாட்டின் அழகை எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழுப்பு மற்றும் வெள்ளை நிற பாரம்பரிய பார்டர்கள் முதல் நுட்பமான கலை வேலைப்பாடுகள் வரை ஒவ்வொரு அம்சமும் ஒரு கதையை சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
புடவை அணியும் விதம், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோட், நுணுக்கமான மெஹந்தி என அனைத்தும் ஒன்றிணைந்து எனக்கு அழகமான, நெருக்கமான தோற்றத்தை உருவாக்கின. அர்த்தமானதாகவும் இருந்தது. எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அத்தியாயத்துக்கு உருவாக்கப்பட்டது இந்த சிறப்பு ஆடை. இந்தக் கனவை நிஜமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.