தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.. ஆசிய போட்டியில் இரட்டைப் பதக்கம்
தேசிய சாதனையுடன் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.. ஆசிய போட்டியில் இரட்டைப் பதக்கம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தனது 2வது பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் மற்றும் அனு ராகவன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஓடிய வித்யா ராம்ராஜ், இலக்கை நோக்கி புயல் வேகத்தில் முன்னேறினார். பந்தய தூரத்தை வெறும் 54.75 வினாடிகளில் கடந்து 3வது இடத்தை பிடித்த அவர், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் அவர் ஓடிய 54.75 வினாடி என்பது அவரது தனிநபர் சிறந்த நேரமாகவும், புதிய தேசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜ் வெல்லும் 2வது பதக்கம் இதுவாகும். முன்னதாக நடைபெற்ற 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் அபாரமாக ஓடி இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார்.
தற்போது தனிநபர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று, ஒரே தொடரில் 2 பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். களத்தில் அசத்திய தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.