தாம்சன்
ரயில் இரைச்சல் குறித்த கருத்துகளைக் கருத்தில் கொண்டு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் சில பகுதிகளில் இரைச்சலைக் குறைக்கும் கருவிகளைப் பொருத்துவதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் ஓர் ஒப்பந்தப் புள்ளியைக் கோருகிறது.
இறுக்கமான தண்டவாள வளைவுகள் காரணமாக அதிக இரைச்சல் உள்ள இடங்களில், ரயில் தணிப்பான்கள் பொருத்தப்படும் என்று ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
தண்டவாளங்களில் பொருத்தப்படும் கருவியான, இந்தத் தணிப்பான் ரயில்கள் அதன் மீது கடந்து செல்லும்போது ஏற்படும் தண்டவாள அதிர்வுகளைக் குறைத்து, இரைச்சல் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.
ஸ்பிரிங்லீஃப், லென்டோர் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகள், ஸ்டீவன்ஸ், நேப்பியர் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகள், பிரைட் ஹில், அப்பர் தாம்சன் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் இரைச்சல் அளவு குறித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழில் 2023ஆம் ஆண்டு வெளியான வாசகர் கருத்துப் பிரிவில் அளித்த பதிலில், சிங்கப்பூரின் அனைத்து நிலத்தடி எம்ஆர்டி பாதைகளிலும் உட்புற இரைச்சல் அளவு பொதுவாக 85 டெசிபல் (குறிப்பிட்ட கால அளவில் ஒலி அழுத்தத்தை அளவிடும் முறை) என்ற வரம்பிற்குள் பராமரிக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பகுதிகள் உட்பட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் சில இடங்களில் இந்த இரைச்சல் வரம்பு மீறப்படக்கூடும் என்பதை அறிவதாக ஆணையம் அப்போது கூறியிருந்தது.
குடியிருப்பாளர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தேவையைக் குறைக்கவும், அனைத்துப் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் வளைவான பாதையமைப்பு அவசியமாக இருந்தது என்றும் ஆணையம் மேலும் குறிப்பிட்டது.
அப்பகுதிகளில் ரயில்களின் வேகத்தைக் குறைத்தல், தண்டவாளங்களுக்கும் சக்கரங்களுக்கும் இடையிலான தொடர்பைச் சீராக்க தண்டவாளங்களின் மேற்பரப்பைச் சீரமைத்தல் உட்பட, இரைச்சல் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தனது 2023ஆம் ஆண்டுப் பதிலில் தெரிவித்துள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“எங்களின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இரைச்சலைக் குறைக்கும் நடவடிக்கைகளை நாங்கள் சோதித்து வருகிறோம். இதற்குச் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளன,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
ரயில் தணிப்பான்களைப் பொருத்துவது ரயில் சேவைகளைப் பாதிக்காது என்று ஆணையம் கூறியது. மேலும், ரயில் சேவைகள் நடைபெறாத இரவு நேர இடைவெளியான ‘பொறியியல் பணிக்கான நேரங்களில்’ இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது தெரிவித்தது.