📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 17, 2026 10:33 PM

‘டேப்ஸ்’ இடைக்கால ஓய்வூதியம் குறைப்புக்கு ஜாக்டோ

‘டேப்ஸ்’ இடைக்கால ஓய்வூதியம் குறைப்புக்கு ஜாக்டோ

சென்னை: ‘டேப்ஸ்’ இடைக்கால ஓய்வூதியத் தொகை குறைக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ, இது தொடர்பாக நிதித்துறை வெளியிட்ட கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தவெக அரசு பொறுப்பேற்று 4 மாதங்கள் ஆகியும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான (டேப்ஸ்) விதிமுறைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல.

டேப்ஸ் விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1972-ன் அடிப்படையில் தான் அமைய வேண்டும். அதில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது.

டேப்ஸ் விதிகள் வெளியிடுவதற்கு ஏற்படும் காலதாமதத்தால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இடைக்கால நிவாரணமாக அனைத்து ஓய்வூதியதாரருக்கும் அவர்கள் இறுதியாகப் பெற்ற அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் கணக்கிடப்பட்டு அத்துடன் 60 சதவீத அகவிலைப்படி வழங்கும் நடைமுறையானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்றவர்கள் 2 மாதங்களாக இடைக்கால ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இடைக்கால ஓய்வூதியம் கணக்கிடுவது தொடர்பாக செலவினத்துறை செயலர் கடந்த 11-ம் தேதி கருவூல கணக்கு இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஓய்வுபெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் இடைக்கால ஓய்வூதியம் 30 சதவீதம் வழங்கப்படாது என்றும் அதற்குப் பதில் ரூ.10 ஆயிரம் மட்டுமே இனி வழங்கப்படும் என்றும், 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு வழங்கப்படு வந்த கூடுதல் இடைக்கால ஓய்வூதியத்தொகை 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்படும். 18 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளோருக்கு 30 சதவீதம் இடைக்கால ஓய்வூதிய நடைமுறை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேப்ஸ் விதிமுறைகள் வெளியிட தமிழக அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வரும் சூழ்நிலையில், ஏற்கெனவே பெற்ற இடைக்கால ஓய்வூதியத்தை பிடித்தம் செய்வதும், இடைக்கால ஓய்வூதியத்தைக் குறைப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தவெக தேர்தல் வாக்குறுதியின்படி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், அதுவரையில் இடைக்காலமாக டேப்ஸ் திட்டத்துக்கான விதிகளை வெளியிடவும், டேப்ஸ் திட்டத்தில் இடைக்கால ஓய்வூதியத்தை குறைக்க வெளியிடப்பட்ட நிதித்துறை கடிதத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.