📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 08:37 PM

ஸ்பாட்டிஸ்வுட்டில் வெற்றுத்தளங்களை வியக்கும் தளங்களாக உருமாற்ற $188,000

ஸ்பாட்டிஸ்வுட்டில் வெற்றுத்தளங்களை வியக்கும் தளங்களாக உருமாற்ற $188,000

புளோக்குகளின் வெற்றுத்தளங்களை மேலும் ஈர்க்கக்கூடிய சூழலாக மாற்ற, ‘ஸ்பாட்டிஸ்வுட் பார்க்’ குடியிருப்பாளரான 57 வயது திரு ராய் ஃபங், அங்குள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகளைப் பல்வேறு கருப்பொருள்களில் அழகுபடுத்த பரிந்துரைத்தார்.

“வெற்றுத் தளங்கள் வெறும் கடந்து செல்லும் இடங்களாகவே இருக்கின்றன. குடியிருப்பாளர்களிடையே உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் தனித்துவமான கருப்பொருள்களுடன் அவை அமைந்தால் சிறப்பாக இருக்கும்,” என்று 25 ஆண்டுகளாக அந்த வட்டாரத்தில் வசித்து வரும் திரு ஃபாங் கூறினார்.

அவரைப் போன்றோரின் யோசனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க, சிங்கப்பூரின் முதல் பங்கேற்பு வரவுசெலவுத் திட்ட முயற்சியின்கீழ், அந்தக் குடியிருப்புப் பேட்டையில் உள்ள ஏழு வெற்றுத் தளங்களின் மேம்பாட்டுக்கு $130,000 வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில் பொருள்களின் செலவு, மேசைகளின் வடிவமைப்பு நிலைத்திருக்கப் பூசப்படும் ‘எபோக்சி’ பூச்சு, ஊழியர்களின் சம்பளம் ஆகியவை அடங்கும்.

அக்குபஞ்சர் நடைபாதை, கல் இருக்கைகள் ஆகிய மேலும் இரு யோசனைகளுக்கு முறையே $48,000 மற்றும் $10,000 ஒதுக்கப்பட்டுள்ளன.

யோசனைகளை முன்மொழிவது முதல் குடியிருப்புப் பேட்டை மேம்பாடுகளைத் தீர்மானிப்பது வரை நிதி எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் குடியிருப்பாளர்களுக்கு பங்களிக்கும் வாய்ப்பை அந்த முயற்சி வழங்கியது.

விருப்பமான மேம்பாடுகளைப் பரிந்துரைப்பது முதல் முழுமையான யோசனையை உருவாக்குவது வரை, குடியிருப்பாளர்கள் தொடக்கத்திலிருந்தே ஈடுபட்டனர்.

162 யோசனைகளில் இருந்து ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டு ஜூலை மாதம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வெற்றி பெற்ற மூன்று யோசனைகளுக்கு மொத்தம் $188,000 கிடைத்தது.

போதிய வாக்குகள் பெறாத மற்ற மூன்று யோசனைகள்: பாறையில் ஏறுவதற்கான சுவர், பிக்கிள்பால் ஆடுகளம் மற்றும் சுடப்பட்ட இறைச்சி சமைக்கும் பகுதி.

தஞ்சோங் பகார் நகர மன்றம் மற்றும் கொள்கை ஆய்வுக் கழகத்தின் கூட்டு முயற்சியான இந்தப் பங்கேற்பு வரவுசெலவுத் திட்டத்திற்கான மொத்த நிதி $200,000 ஆகும்.

இந்த நிதி பந்தயப்பிடிப்புக் கழகம் நிர்வகிக்கும் ‘எதிர்காலத்திற்குத் தயாராகும் சமுதாயத் தாக்க நிதியிலிருந்து’ பெறப்பட்டது.