'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தை அறிவித்த மின்வாரிய ஊழியர்கள்
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தை அறிவித்த மின்வாரிய ஊழியர்கள்
ஸ்மார்ட் மீட்டர் திட்டம், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் என்பதால் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு இதனை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
Published : October 8, 2026 at 5:47 PM IST
சென்னை: வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் தலைவர் கண்ணன் ஆகியோர் இன்று (அக்டோபர் 8) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், "தமிழ்நாட்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டம் (Revemped Distribution Sector Scheme) கீழ், மொத்தச் செலவினம் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சென்னை (ஐந்து திட்டங்கள்), காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 12 மண்டலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளன. அவ்வாறு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மின் விநியோகம் மொத்தமாகவே தனியார்மயமாகும்.
ஆகையால், அரசின் இந்த அறிவிப்பு மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 200 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும். விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் ரத்தாகும்.
மேலும், தமிழ்நாடு அரசினால் கைத்தறி, நெசவு உள்ளிட்ட 14 தொழில்களுக்கு வழங்கப்படும் மின்சார மானியங்களும் கிடைக்காது. இதுவரை நாம் பயன்படுத்திய மின்சாரத்திற்கே கட்டணம் செலுத்தினோம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், இனிமேல் பயன்படுத்த உள்ள மின்சாரத்திற்கும் முன் கூட்டியே பணத்தை செலுத்தும் நிலை ஏற்படும். அத்துடன், பணம் உள்ளவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும்.
மேலும், மின்வாரியத்தில் பணிபுரியும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதுடன், இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு சமூக நீதி கேள்விக்குறியாகும்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் என்பதால் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 2,852 பிரிவு அலுவலகங்கள் முன்பு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 14 வரையும், அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி அன்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதுதவிர, அக்டோபர் 22 முதல் அக்டோபர் 29 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.