📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 08:04 PM

பழிக்குப் பழியாக அரங்கேறிய சம்பவம்

பழிக்குப் பழியாக அரங்கேறிய சம்பவம்

த.வெ.க. பிரமுகர் படுகொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், தவெக பிரமுகர் கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியபோது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பழி தீர்த்த பயங்கரம்

போலீஸ் விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 பள்ளி மாணவர்கள்

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.