📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 01:37 PM

புதிய தலைமைச் செயலகம்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதிய தலைமைச் செயலகம்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு அவசர அவசரமாக வெளியிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை அங்கு பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

வடசென்னை மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வடசென்னையில் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சண்முகம், தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் கடுமையான இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றார்.

இருப்பினும், அரசு அலுவலகங்கள் நீண்டகாலப் பயன்பாட்டிற்கானவை என்பதால் அரசு அவசரப்பட்டுச் செயல்படக் கூடாது என்றார் திரு சண்முகம்.

“பட்டினப்பாக்கத்தில் புதிய வளாகம் அமைப்பதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகத்தைக் கொண்டு செல்வதும் பொருத்தமாக இருக்காது.

“எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அனைவரும் ஏற்கும் வகையில் பொருத்தமான இடத்தைத்தேர்வு செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிட்டார் திரு சண்முகம்.

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கடும் கடன் சுமைக்கு இடையே ரூ.1,200 கோடி செலவில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போதைய சூழலில் தேவையற்றது என்று விமர்சித்துள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மீனவர் குடியிருப்புகள் நிறைந்த, போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியில் இத்திட்டத்தைக் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.