📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 11, 2026 05:41 PM

‘புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பதா?’

‘புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பதா?’

தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா | கோப்புப் படம்

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பது என்பது, தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை மனம் குளிர வைப்பதற்கான செயல் என அப்பட்டமாக தெரிகிறது என ஜவாஹிருல்லாவை தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் விஜய் 3-ஆம் தர, 4-ஆம் தர பேச்சாளர் போல சட்டமன்றத்தில் செப்.7-ம் தேதி பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா புலம்பியுள்ளார். மேலும், சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி முதல்வர், இதற்கு Sorry சொல்ல வேண்டும் என்று ஊடகத்துறை மூலம் அவர் கோரியுள்ளார். இதன் மூலம் திமுக தலைமையிடம் தேர்தலில் தான் பெற்ற இரண்டு சீட்டுகளுக்காக தனது விசுவாசத்தைக் காட்டி செஞ்சோற்று கடனைத் தீர்த்துள்ளார் முனைவர்.

“தனது உடல்மொழி ஒரு தற்செயலான வெளிப்பாடு. அது எந்த வகையிலும் வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. மேலும் இது தனிப்பட்ட முறையில் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்ட செயலாக புரிந்து கொள்ளக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என முதல்வர் விஜய் ஏற்கெனவே பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்துள்ளார்.

இருந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜவாஹிருல்லா மற்றும் சில திமுக-வினரும் இதை பெரிதாக்கி வருகின்றனர். சட்டப்பேரவையில் கருணாநிதி பெயரை ஒரு அமைச்சர் கூறியவுடனே, எழுந்து Sorry கேட்டவர் எங்களது முதல்வர். அப்பேர்பட்ட அரசியல் மாண்பு, அரசியல் முதிர்ச்சி கொண்டவர். முதல்வர் Sorry கூறி பிராயசித்தம் செய்துகொள்ள சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று அரசியல் மாண்பின்றி, மனிதநேயமின்றி கேட்பது மனிதநேய மக்கள் கட்சிக்கு அழகா? இது நகைப்புக்குரியது.

"வாங்கிய காசுக்கு மேல் கூவுறானே" என்ற சினிமா வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் பெண்களை இழிவாகப் பேசி, கைதான எதிர்க்கட்சித் தலைவர், மன்னிப்பு கோரி பிராயச்சித்தம் தேட விரும்பினால், முனைவர் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட தாராளமாக கோரலாம். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து, அது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்; ஜார்ஜ் கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை, எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி அதிகளவில் உள்ளது என்று கூறித்தான் கருணாநிதி ஓமந்தூரார் தோட்டத்தில் ஒரு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை கட்டி 2010-ல் திறந்தார் என்பதை ஜவாஹிருல்லா ஏன் மறந்து போனார்? 2010-லேயே இடநெருக்கடி இருந்த இடம், 16 வருடங்களுக்குப் பின்பு எந்த அளவிற்கு இடநெருக்கடி கூடியிருக்கும் என்பது மூன்றாவது முறை எம்எல்ஏ. ஆன முனைவருக்கு ஏன் தெரியவில்லை?

2023ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி சட்டமன்றத்திலே, இடநெருக்கடி காரணமாக ஆளுநர் மாளிகை அல்லது கிண்டியிலே புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என பேரவையில் பேசியவர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அப்போது MLA-ஆக இருந்த முனைவர் ஜவாஹிருல்லா ஏன் அதை எதிர்க்கவில்லை? கூட்டணி விசுவாசமா? எதிர்ப்பதற்காக எதிர்ப்பது அரசியல் அல்ல. குறை இருந்தால் சுட்டிக்காட்டுவதும், தீர்வு இருந்தால் முன்வைப்பதுமே பொறுப்பான அரசியல். கடந்த திமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவில் நினைவுச் சின்னம் கடலுக்கு நடுவே அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேனா நினைவு சின்னம் அமைத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவக் கிராமங்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், படகுகள் சென்று வர இடையூறு ஏற்படும் என்றும் மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்தன. அதுமட்டுமின்றி, மழை மற்றும் இயற்கை பேரிடர்: புயல், கடல் சீற்றம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது கடலுக்குள் அமைக்கப்படும் கட்டுமானம் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்ற அச்சம் எழுப்பப்பட்டது. மேலும், மக்கள் வரிப் பணத்தில் பல நூறு கோடி ரூபாயை கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க செலவழிப்பதற்குப் பதிலாக, அதை மக்கள் நலத்திட்டங்களுக்கும் கல்வி, மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம் என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

அந்த நேரத்தில் "வாய் மூடி மவுனியாக இருந்தவர்" இப்போது பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பது தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை மனம் குளிர வைப்பதற்கான செயல் என அப்பட்டமாக தெரிகிறது. திடீரென்று மீனவர்கள் மீது பாசம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. மீனவர் சமுதாயத்திலிருந்து நான்கு பேருக்கு வாய்ப்பு கொடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தது தவெகவின் முதல்வர்.

ஆனால் ஜவாஹிருல்லா அன்றாடம் வழிபடும் திமுக, மீனவர் சமுதாயத்தை சார்ந்த ஒருவருக்கு மட்டுமே 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் 2026 திருத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்பட்டு வந்த அரசின் நிதி உதவியை ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தியது தவெக அரசு. எனவே உண்மையான மீனவ நண்பன் எங்கள் முதல்வர் தான். எனவே இனி அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி, தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று எம்எல்ஏ முஸ்தபா கூறியுள்ளார்.