புகைமூட்டம்: மலேசியா பாதிப்பு, இந்தோனீசியா தீவிர நடவடிக்கை
ஜகார்த்தா: அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்துவரும் நிலையிலும் புகைமூட்டம் பரவும் சூழலிலும் இந்தோனீசிய அதிகாரிகள் காடுகள், நிலப்பகுதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தோனீசியா கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளது என்றும் இந்த நிலைமை நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்றும் அந்நாட்டின் வனத்துறை அமைச்சர் ராஜா ஜூலி ஆண்டனி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மழைக்காலம் தாமதமாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபர் அல்லது நவம்பர் தொடக்கம் வரை காட்டுத்தீப் பிரச்சினை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு நடவடிக்கைகளை, தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் ரியாவ், ஜாம்பி, தென்சுமத்ரா, மேற்குக் கலிமந்தான், தென்கலிமந்தான், மத்திய கலிமந்தான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு அப்பாலும் விரிவாக்கம் செய்துவருவதாக இந்தோனீசிய தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர்கள் மூலம் நீர் ஊற்றித் தீயை அணைக்கும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த புகைமூட்டம் ஏற்படும் என்ற முன்னறிவிப்பைத் தொடர்ந்து, காட்டுத்தீயால் மேலும் பரவலான சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விரிவாக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் காற்றின் தரம் மோசமடைந்துவரும் நிலையில், காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200க்கும் அதிகமாகப் பதிவானால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து பாடம் கற்கும் முறை கையாளப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. பினாங்கு மாநிலக் கல்வித்துறை இயக்குநர் முகம்மது ஸியாவுடின் மாட் சாட் இதுகுறித்து மேல்விவரம் தந்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
நான்கு கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 160க்கு மேல் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறியீடு 100 முதல் 200 வரை இருந்தால், வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்குப் புகையால் மூச்சுப் பிரச்சினைகள் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால், பெற்றோர் அவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல மாவட்டங்களில் புகைமூட்டம் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலச் சுற்றுப்புறத் துறை திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், நிலத்தைச் சுத்தப்படுத்துதல் போன்ற தூசு ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலாய் (172), சிரம்பான் (168), போர்ட் டிக்சன் (155) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
மலேசியத் தீபகற்பத்தில் மொத்தம் 41 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா (187), ஷா அலாம் (175), பெட்டாலிங் ஜெயா (169), கிள்ளான் (167), பாந்திங் (166), கோலா சிலாங்கூர் (164) ஆகிய ஆறு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத்தரத்தைப் பதிவு செய்துள்ளன.