📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 07:01 PM

புகைமூட்டம் குறித்து தரவுகள் சேகரிக்கும் சிங்கப்பூர்: கிரேஸ் ஃபூ

புகைமூட்டம் குறித்து தரவுகள் சேகரிக்கும் சிங்கப்பூர்: கிரேஸ் ஃபூ

சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்ட தூய்மைக்கேட்டுச் சட்டத்தின்கீழ் தவறு செய்த நிறுவனங்களுக்கு எதிராகத் தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

தற்போது சேகரிக்கப்படும் தரவுகளைப் பார்க்கவேண்டும் என்ற அவர், நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.

யூஹுவா சமூக மன்றத்தில் முகக்கவசங்களை விநியோகம் செய்த திருவாட்டி ஃபூ செய்தியாளர்களிடம் பேசினார்.

“இந்தோனீசிய அதிகாரிகள் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எல் நினோ பருவநிலையால் இந்த ஆண்டு சிரமமான ஆண்டாக உள்ளது,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் செப்டம்பர் 4ஆம் தேதி காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

அதிலிருந்து, எல்லை தாண்டிய புகைமூட்ட தூய்மைக்கேட்டுச் சட்டத்தை மீறும் அளவுக்குக் கடுமையான புகைமூட்டச் சம்பவங்கள் பதிவாகிவிட்டன.

2014ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம், 24 மணிநேரத்துக்குமேல் காற்றின் தரம் மோசமாக இருப்பதற்கு வழிவகுக்கும் காட்டுத்தீக்குக் காரணமாக இருக்கக்கூடியோரைக் குறிவைக்கிறது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101க்கும் மேல் இருந்தால், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

துணைக்கோளத் தகவல், காற்றின் வேகம், காற்றின் திசை, வானிலை ஆய்வகத் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி காட்டுத்தீயிலிருந்து எழும் புகை சிங்கப்பூரை நோக்கி நகர்கிறதா என்பது ஆராயப்படுகிறது.

சட்டத்தை மீறுவோருக்கு ஒவ்வொரு நாளும் $100,000 அபராதம் அல்லது அதிகபட்சம் $2 மில்லியன் விதிக்கப்படும்.

இதற்கிடையே, இந்தோனீசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயாராக இருக்கிறது என்று கூறிய திருவாட்டி ஃபூ, இந்தோனீசியா அதுகுறித்து இன்னும் பதிலளிக்கவில்லை என்றார்.

வட்டார அளவிலும் ஆசியான் அளவிலும் புகைமூட்டம் குறித்து கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.