📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 06:03 PM

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் திட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் திட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அறிவித்திருந்தது. 1,200 கோடி ரூபாய் செலவில் 25.55 ஏக்கர் பரப்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ வேலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டது குறித்து எந்த குறிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைத்தால் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், அந்தப் பகுதியில் உள்ள 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியான பட்டினப்பாக்கத்தில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. இந்த பகுதி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை தன்னிச்சையானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.