📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 10, 2026 09:34 AM

பிரிட்டனில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் கோளாறு; எஸ்ஐஏ பாதிப்பு

பிரிட்டனில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் கோளாறு; எஸ்ஐஏ பாதிப்பு

லண்டன்: பிரிட்டனின் முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதாகவும் மேலும் இரண்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்குச் செல்லவிருந்த இரண்டு எஸ்ஐஏ விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதாகப் புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்துச் சேவை அமைப்பின் விமானத் தகவல் சேவை முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் இதனால் நாடு முழுதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட எஸ்கியூ 308 விமானத்தில் 401 பயணிகளும் 29 ஊழியர்களும் இருந்தனர். ஏர்பஸ் ஏ380-800 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் பிரான்ஸின் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்குத் தரையிறங்கியது. பின்னர், பயணிகள் அனைவரும் தரைவழிப் போக்குவரத்து மூலம் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேவேளையில், 203 பயணிகளையும் 19 ஊழியர்களையும் ஏற்றிச் சென்ற எஸ்கியூ 318 விமானம் ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு, உள்ளூர் நேரப்படி இரவு 8.09 மணிக்குத் தரையிறங்கியது. தேவையான ஒப்புதல்கள் கிடைத்தவுடன், போயிங் 777-300இஆர் ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் மியூனிக்கில் இருந்து லண்டன் ஹீத்ரோவிற்கு இயக்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

இந்தத் திருப்பி விடல்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 8) லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூர் திரும்ப வேண்டிய எஸ்கியூ 319, எஸ்கியூ 321 ஆகிய இரு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பிரிட்டன் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் இரண்டாவது நாளாகவும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 8) மட்டும் பிரிட்டன் விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் ஏறத்தாழ 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.