📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 06:34 PM

‘பிரிக்ஸ்’ செயல்பாடுகளில் பங்கேற்பீர்: விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழில்முனைவோருக்கு மோடி அழைப்பு

‘பிரிக்ஸ்’ செயல்பாடுகளில் பங்கேற்பீர்: விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழில்முனைவோருக்கு மோடி அழைப்பு

புதுடெல்லி, செப். 13–தொழில் முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்பதை தெளிவுபடுத்திய பிரதமர் மோடி, இந்த செயல்பாடுகளில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.18-வது பிரிக்ஸ் மாநாடு நேற்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியது. பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாளான இன்று பாரத் மண்டபத்தில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இதனையடுத்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:–பிரிக்ஸ் தளவாட விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக் கட்டமைப்பு, நமது விநியோகச் சங்கிலிகளை மேலும் நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும்.பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் ‘பின்னடைவை எதிர்கொள்ளும் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை’ ஆகிய 4 முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த முயற்சிகளுக்கு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்ததன் மூலம், பொதுவான இலக்குகளை அனைவருக்கும் பயன் அளிக்கும் ஒத்துழைப்பாக மாற்ற முடிந்தது.பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையினரை கருத்தில் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கியது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.வளர்ச்சியையும் சுற்றுச்சூழலையும் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இதை இந்தியா நம்புகிறது. அதனால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்கால தலைமுறையினருக்காக இது நமது பொறுப்பாகும். பிரிக்ஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண் தொழிலாளர் பங்கேற்பு, சமூக பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.கூட்டாண்மை, ஒத்துழைப்புசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அறிவு, நிதி மற்றும் புதிய சந்தைகளுடன் இணைக்கும் வகையில் பிரிக்ஸ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நமது நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு உதவும் வகையில் பிரிக்ஸ் நகர்ப்புற போக்குவரத்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் மூலம் நட்பு, கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா முன்னெடுத்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அரசுகளுக்கு இடையிலானதாக மட்டுமே இருக்கக்கூடாது என்று நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.டிஜிட்டல் வேளாண்மை கூட்டமைப்பு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் உண்மையான தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்களை ஆயுதமாக பயன்படுத்துவது நமது பொதுவான முன்னேற்றத்துக்கு தடையாக அமையக்கூடும். எனவே, தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள் வதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.உலக நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் உலகளாவிய நம்பிக்கையை பிரிக்ஸ் பெற்றுள்ளது. தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சார்ந்த ஒருமித்த கருத்து இந்த மாநாட்டில் எட்டப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டின் தீர்வுகள் உலக நாடுகளுக்கு பயனளிக்க வேண்டும். உலகின் தெற்கு நாடுகளின் நம்பிக்கையை பிரிக்ஸ் பெற்றுள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இன்று பிற்பகல் கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி, பாரத் மண்டபத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு அந்தந்த நாட்டு தலைவர்களுடன் தனித்தனியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.நாடு திரும்பினார் சீன அதிபர்பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் சீன அதிபர் ஜின்பிங். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. ஆனால் இதில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் அதனை புறக்கணித்து விட்டார் என கூறப்படுகிறது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், அவர் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்கு சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பினார். அவரும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிற தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.